பாஜக அலுவலகத்தில் திடீரென குவிக்கப்பட்ட போலீசார்.. தீவிர சோதனை.. காரணம் இந்த 2 மேட்டர் தான்!
சென்னை : சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2 விஷயங்கள் காரணமாக பாஜக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக பிரமுகர்களின் ஊழல் பட்டியலை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடுவேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்பே தெரிவித்து இருந்தார். நேற்றும், திமுக ஊழல் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று கூறி ஒரு வீடியோ டீசரையும் வெளியிட்டிருந்தார் அண்ணாமலை.

இந்நிலையில், இன்று காலை திமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடுவது குறித்த செய்திகளை சேகரிக்க செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாஜக தலைமை அலுவலகத்தில் குவிந்த நிலையில் பாஜக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ஐடி கார்டு இருந்தால் தான் : கமலாலயம் அமைந்துள்ள தி.நகர் வைத்தியநாதன் தெருவில் இரு பக்கமும் தடுப்பு வேலி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாஜக அலுவலகத்துக்கு வந்த அனைவரையும் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதித்தனர். அனைவரது அடையாள அட்டைகளும் செல்போனில் புகைப்படமாக எடுக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இன்னொரு சம்பவமும் இந்த போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்புக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆருத்ரா நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டவர்கள் சென்னை தியாகராயநகரில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தை நேற்று முற்றுகையிட முயன்றனர்.
ஆருத்ரா மோசடி : ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் ஆயிரக்கணக்கானோரிடம் ரூ.2,438 கோடி வரை முதலீடாகப் பெற்று, சொன்னபடி பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக செயல்பட்ட ஹரீஷ் என்பவர் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் மாநிலச் செயலாளராக இருந்துள்ளார்.
ஹரீஷ், பாஜகவில் பதவி பெறுவதற்காக பலரிடம் பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக நிர்வாகி ஆர்.கே.சுரேஷும் இந்த நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்த நிலையில் அவர் வெளிநாட்டுக்குத் தப்பியோடியுள்ளார்.

பாஜக அலுவலகம் முற்றுகை : இதனால், இந்த முறைகேட்டில் பாஜக நிர்வாகிகள் பலரும் சிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், பாஜக நிர்வாகிகளுக்கு ஆருத்ரா மோசடியில் கூறி அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் எனக் கோரி பணத்தை இழந்து பாதிக்கப்பட்டவர்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.
ஆருத்ரா மோசடி விவகாரம் தொடர்பான விசாரணை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட நபர்கள், பாஜக அலுவலகத்திற்கு வருவது அதிகரிக்கும் என்பதன் காரணமாகவும், அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications