சென்னை மெட்ரோவுக்கு கிடைத்த "சர்வதேச அங்கீகாரம்!" உண்மையிலேயே வேற லெவல்தான்.. அடிதூள்! ஏன் முக்கியம்
சென்னை: தலைநகர் சென்னையில் மெட்ரோ எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். இதனிடையே சென்னை மெட்ரோ நிறுவனத்திற்குச் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் போக்குவரத்து பிரச்சினை மிக மோசமானதாக மாறி வருகிறது. அதிலும் தலைநகர் சென்னையில் போக்குவரத்து மிகப் பெரிய பிரச்சினையாகவே மாறிவிட்டது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் இக்கட்டான ஒன்றாக மாறியுள்ள நிலையில், போக்குவரத்தைக் குறைக்கத் தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னை போக்குவரத்து: நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கப் பல முக்கிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.. அதேபோல நகரில் முக்கிய சாலைகளை விரிவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும், நகரில் போக்குவரத்தைப் பெரியளவில் கட்டுப்படுத்த முடியவில்லை. வெளியே சென்றாலே சில மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும் என்ற சூழலே இருக்கிறது. அதிலும் பீக் ஹவரில் தனியாகச் சொல்லத் தேவையில்லை.
என்னதான் மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம் செய்தாலும் கூட அவை போக்குவரத்தை முழுமையாகக் குறைக்காது. எப்போது பெரும்பாலான மக்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்களோ.. அப்போது தான் போக்குவரத்து குறையும். இதனால் அதிகப்படியான மக்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை மற்ற இந்திய நகரங்களுடன் ஒப்பிடுகையில் பொது போக்குவரத்து சற்று சிறப்பாகவே உள்ளது.

மெட்ரோ ரயில்கள்: மாநகர பேருந்துகள், பறக்கும் ரயில்கள், மின்சார ரயில்கள் பல காலமாகவே இருக்கிறது. இது தவிரச் சென்னையில் மெட்ரோவும் கொண்டுவரப்பட்டது. இப்போது சென்னையில், சென்டரல் முதல் பரங்கிமலை வரை ஒரு வழித்தடத்திலும் விம்கோ நகர் முதல் சென்னை ஏர்போர்ட் வரையிலும் இரண்டு வழித்தடங்களில் 40+ மெட்ரோ நிலையங்களுடன் 54.1 கிலோ மீட்டர் தொலைவில் இயங்கி வருகிறது.
போக்குவரத்து பிரச்சினை இல்லாமல் செல்லலாம், சரியான நேரத்தில் சேவை, அடிக்கும் வெயிலுக்கு இதமான ஏசி எனப் பல வசதிகள் இருப்பதால் பலரும் சென்னையில் மெட்ரோவில் பயணிக்கவே விரும்பி வருகின்றனர். இதனால் ஒவ்வொரு மாதமும் மெட்ரோவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இது தவிர இப்போது மூன்று புதிய வழித்தடங்களில் மெட்ரோ கட்டுமானமும் நடந்து வருகிறது.
3 வழித்தடங்கள்: மாதவரம்-சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம்- சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் மெட்ரோ கட்டுமானம் நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் 2026 முதல் படிப்படியாக முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது. அந்த கட்டுமானம் முடிந்தால் நகரில் மெட்ரோ கட்டமைப்பு விரிவாக இருக்கும். நகரின் எந்த பகுதியில் இருந்தும் மிக எளிதாக மற்றொரு பகுதிக்குச் செல்ல முடியும்.
இதனிடையே சென்னை மெட்ரோவுக்கு இப்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள பசுமை அமைப்பு 2023ஆம் ஆண்டுக்கான பசுமை உலக விருதைச் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்திற்குக்குட வழங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி மியாமியில் நடைபெற்ற விழாவில், பசுமை உலக விருதுகள் 2023இல் இந்த விருது சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

முதல் பரிசு: கார்பன் குறைப்பு பிரிவில் சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு வெள்ளி பரிசு கிடைத்துள்ளது.. ஆற்றல் பயன்பாட்டைக் குறைப்பதற்கான அதன் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது. குறைவான கார்பன் வெளியேற்றம் மற்றும் சூரிய ஆற்றல் பயன்பாட்டை அதிகரிப்பது என சிஎம்ஆர்எல் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகக் கூறி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், சென்னை மெட்ரோ கார்பன் உமிழ்வைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. பசுமை அமைப்பு என்பது பிரிட்டனைச் சேர்ந்த ஒரு சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கும் லாப நோக்கற்ற அமைப்பாகும். உலகம் முழுவதும் சுற்றுச்சூழலுக்கான சிறந்த நடைமுறைகளை அங்கீகரித்து, ஊக்குவிக்கும் வகையில் இவர்கள் விருதுகளை வழங்குவார்கள்.












Click it and Unblock the Notifications