கிரீன் சிக்னல் விழுந்தும் நகரலையே.. பாஜகவுக்கு தாவ ரெடியான அதிமுக மாஜி எம்.பி தாமதம் ஏன்? ஓ.. இதானா?
சென்னை : சமீப நாட்களாக பாஜகவில் இருந்து பலர் அதிமுகவுக்கு தாவி வரும் சூழலில், அதிமுக மாஜி எம்.பி மைத்ரேயன், பாஜகவுக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அப்படி எந்த விஷயமும் நடக்கவில்லை. இதுகுறித்து பாஜக வட்டாரத்தில் விசாரித்தால், ஒரு கதையைச் சொல்கிறார்கள். பாஜக தேசியத் தலைவர் நட்டா முன்னிலையில் தான் கட்சியில் இணைவேன் என உறுதியாக இருக்கிறாராம் மைத்ரேயன்.
மைத்ரேயன், பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்ததுமே அவருக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டது பாஜக தரப்பு. ஆனால், அவரோ, தேசியத் தலைவர் முன்னிலையில் தான் இணைவேன் என கறாராக இருப்பதால், பாஜக மாநிலத் தலைமை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாம். பெரிய அளவில் செல்வாக்கோ, ஆதரவாளர்கள் பலமோ இல்லாத அவர் வருவதால் அதிமுகவுக்கு இந்த இழப்பும் ஏற்படப் போவதில்லை. அப்படி இருக்க, அவர் இவ்வளவு 'பிகு' செய்கிறாரே என பாஜகவினர் பொறுமுகிறார்களாம்.

மைத்ரேயன் இளம் வயது முதலெ ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாகப் பணியாற்றியவர். தமிழ்நாடு பாஜகவில் பொதுச் செயலாளர், மாநிலத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டு அவர் பாஜகவில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து மூன்று முறை ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது.
அணி தாவல் : ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக இருந்தபோது, ஓபிஎஸ் அணிக்கு முதலில் சென்றவர், அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி அணிக்கு மீண்டும் திரும்பினார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ஆரம்பத்தில் ஓபிஎஸ் பக்கம் இருந்த மைத்ரேயன், திடீரென எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவரது அணியில் இணைந்து ஓபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
எடப்பாடி பழனிசாமி அணியில் பலருக்கும் ஈபிஎஸ் முக்கிய பதவிகளைக் கொடுத்த நிலையில், மைத்ரேயன் கண்டுகொள்ளப்படவில்லை. தான் எதிர்பார்த்த எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படாததால் அப்செட்டில் இருந்த மைத்ரேயன் மீண்டும் ஓபிஎஸ் அணிக்குத் தாவினார். இதையடுத்து, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதி அவரை கட்சியை விட்டு நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.
பாஜகவுக்கு தூது : ஓபிஎஸ் அணியில் இருந்து வரும் நிலையில், அங்கும் தனக்கு பெரிய எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்து தாய்க்கட்சியான பாஜகவுக்கே செல்லும் முடிவை எடுத்துள்ளார் மைத்ரேயன். அதிமுகவில் இணைவதற்கு முன்பு தமிழ்நாடு பாஜகவில் பல்வேறு முக்கிய பதவிகளில் மைத்ரேயன் இருந்துள்ள நிலையில், பாஜக தரப்புக்கு தூது விட்டுள்ளார்.

சமீப நாட்களாக பாஜகவில் இருந்து பலர் அதிமுகவுக்கு சென்றதால் அப்செட்டாகி இருந்த தமிழ்நாடு பாஜக தலைமையும், மைத்ரேயனுக்கு உடனே பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதையடுத்து, மைத்ரேயன் பாஜகவில் இணையப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால், அப்படி எந்தவொரு சம்பவமும் நடக்கவில்லை.
இதனால் தான் லேட் ? : இதுகுறித்து பாஜக வட்டாரத்தில் விசாரித்தால், டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நட்டா, அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்களைச் சந்தித்து, அவர்கள் முன்னிலையில் தான் கட்சியில் இணைவேன் என மைத்ரேயன் உறுதியாக இருக்கிறாராம். அதிமுகவில் 3 முறை எம்.பியாக இருந்த தனக்கு அதுதான் மரியாதை என நினைக்கிறாராம்.

ஆனால், பாஜக மாநில தலைமையோ, 3 முறை எம்.பியாக இருந்திருந்தாலும், தனிப்பட்ட செல்வாக்கோ, ஆதரவாளர்கள் பலமோ இல்லாதவர் மைத்ரேயன். அவரை எதைச் சொல்லி, அமித் ஷா, நட்டா முன்னிலையில் கட்சியில் சேர்ப்பது, விட்டுப் பிடிக்கலாம், எப்படியும் நம்மிடம் வந்துதான் ஆக வேண்டும் என்ற கணக்கில் டீல் செய்கிறதாம். இதனால், மாஜி எம்.பி கடுமையாக அப்செட் ஆகியுள்ளாராம்.
கட்சியில் சேரும்போதே இந்த நிலைமை என்றால் அங்கும் நம் நிலை பரிதாபகரமாகத்தான் இருக்கும் போல, முக்கிய பதவிகள் கிடைப்பது கேள்விக்குறியாகிவிடும், எல்லாவற்றையும் உறுதி செய்துகொண்டு தான் அங்கு செல்வது என தீர்மானித்திருக்கிறாராம். இதனால் தான் இணைவதில் தாமதம் என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications