மோடி அலையை நம்பாமல் கூட்டணிகளை நம்பி களமிறங்கும் தமிழக பாஜக
சென்னை: லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்று சொல்லிக் கொள்ளும் பாஜக தமிழகத்தில் அடிபட்டு மிதிபட்டு அவமானப்பட்டு படாதபாடுபட்டு ஒரு மெகா கூட்டணியை உருவாக்கி இருப்பது விசித்திரமாக இருக்கிறது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோடி அலை வீசுகிறது.. லோக்சபா தேர்தலில் வீசும் மோடி அலை நிச்சயம் பாஜகவை மத்தியில் ஆட்சி அமைக்க வைக்கும் என்றெல்லாம் அக்கட்சித் தலைவர்கள் பேசி வருகின்றனர். வீசுவது மோடி அலை என்று வைத்துக் கொண்டால் வைகோ, விஜயகாந்த் போன்றோர் தேடித் தேடி வந்து இந்த அலையில் ஐக்கியமாகி நீந்தி கரைசேரலாம்.
ஆனால் மாறாக தமிழக பாரதிய ஜனதாவினர் வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் ஆகியோரை தேடித் தேடிப் போய் பேசினர்.. அத்துடன் தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத குழப்பவாத கூட்டணி என்ற சாதனையையும் பாஜக படைத்தது.

வழவழா கூட்டணி
எத்தனை மாதம் பேச்சுவார்த்தைகள்? எத்தனை முறை பேச்சுவார்த்தைகள்? எத்தனை யூகங்கள்? ஒன்றுமே வழிக்கு வரவில்லை.. பாமக வேட்பாளர்களை அறிவித்த தொகுதிகளே வேண்டும் என்று அடம்பிடித்த தேமுதிக.. தேமுதிகவுக்கு ஒரு தொகுதியும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று அடம்பிடித்த பா.ம.க என ஏகப்பட்ட ரணகள கட்சிகள்..

குறைந்த தொகுதிகளில் பாஜக
அதனைவிட பெரிய கூத்து கூட்டணிக்கு தலைமை தாங்கும் பாஜக, தேமுதிகவைவிட குறைவான தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்ததுதான்.. மோடி அலை வீசுகிறது எனில் கூடுதல் தொகுதிகளில் தனித்தே போட்டியிட்டு அலையில் நீந்தி வந்திருக்கலாமே? அல்லது நீந்துவதற்கு துடுப்பு தேவை எனில் தேமுதிக, பாமக, மதிமுகவுக்கு குறைந்த தொகுதிகளைக் கொடுத்துவிட்டு அரவணைத்து சென்றிருக்கலாமே என்பதுதான் அரசியல் விமர்சகர்களின் கேள்வி.

தேமுதிகவுக்கு பாதி
இதனாலேயேதான் பாஜக நின்றிருக்க வேண்டிய திருச்சி, சேலம், மதுரை, திருப்பூர் ஆகிய தொகுதிகளை இழக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மதிமுகவுக்கு மீதி
அதேபோல் ஸ்ரீபெரும்புதூர், தென்காசி ஆகிய இரண்டும் பாஜகவுக்கு வாய்ப்புள்ள தொகுதிகள். இவையும் கூட ம.தி.மு.க-வுக்கு போய்விட்டது. பொள்ளாச்சியும் பாஜகவுக்கு சாதகமானது. அதுவும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்குப் போய்விட்டது.

மோடி அலையை நம்பலையோ?
அதாவது பாஜக செல்வாக்கான 7 தொகுதிகளை விட்டுக் கொடுத்து கூட்டணி அமைத்திருக்கிறது.. மோடி அலை வீசுவதாக நம்பியிருந்தால் இந்த 7 தொகுதிகளில் எளிதாக பாஜக வென்றிருக்கலாமே.. அதைவிட்டுவிட்டு செல்வாக்கான தொகுதியை இழந்து கூட்டணி அமைப்பது என்பது பாஜகவினருக்கே மோடி அலை மீது நம்பிக்கை இல்லை என்பதைத்தான் காட்டுகிறது என்றும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications