For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபாகரன் சிலையை உடைத்த ஜெ. அரசை கண்டித்து 9ம் தேதி கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தெற்கு பொய்கை நல்லூரில், ஐயனார் கோவில் வளாகத்தில் கிராமத்து மக்கள் எழுப்பிய தலைவர் பிரபாகரன் சிலையை உடைத்து நொறுக்கிய அ.தி.மு.க. அரசைக் கண்டித்து, 9 ஆம் தேதி கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

Will protest condemning ADMK government for damaging Prabhakaran's statue: Vaiko

தமிழ்க்குலத்தின் தவமைந்தன், தரணியில் தமிழ் இனத்திற்கு அடையாளத்தை முகவரியை நிலைநாட்டிய சகாப்த நாயகன், நான் உயிரினும் மேலாக நேசிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவச் சிலையை, நாகை மாவட்டத்தில் தெற்கு பொய்கை நல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வாழும் தமிழ் மக்கள், தாங்கள் வழிபடும் ஐயனார் கோவில் வளாகத்தில் வெள்ளைப் புரவியின் அருகில் போர்ச் சீருடையுடன் கம்பீரமாக நிற்கும் வகையில் அமைத்துள்ளனர்.

அவர்கள் வீரன் என்ற குலதெய்வத்தையும், ஐயனாரையும் வழிபட்டு வருகின்றார்கள். எனவே, தலைவர் பிரபாகரன் அவர்களைத் தமிழர்களின் காவல் தெய்வமாகக் கருதி சிலை எடுத்து உள்ளனர். உலகத் தமிழர்கள் உள்ளத்தில் தெற்கு பொய்கை நல்லூர் நிரந்தரமான இடத்தைப் பெற்றுவிட்டது. ஆனால் அண்ணா தி.மு.க. அரசு அதிரடிப்படையை ஏவி, முதலில் சிலையின் தலையைத் துண்டித்து எடுத்துப் பின்னர் முழுமையாக இடித்துத் தகர்த்த அக்கிரமச் செயல் கண்டனத்திற்கு உரியதாகும்.

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை ஈவு இரக்கம் இன்றிக் கொன்று குவித்த கொலைகார ராஜபக்சே அரசின் இராணுவம், வல்வெட்டித்துறையில் பிரபாகரன் அவர்கள் பிறந்த வீட்டை இடித்துத் தரை மட்டம் ஆக்கியது. கிளிநொச்சியில் பிரபாகரன் அவர்கள் இயங்கிய பாசறைக் கட்டடத்தையும், மாவீரர் துயிலகங்களையும் இடித்து மண்மேடாக ஆக்கிய செயல், உலகமெல்லாம் வாழும் தமிழர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சியது.

அதைப்போலவே, அண்ணா தி.மு.க. அரசின் காவல்துறை அதிரடிப்படை வீரத்தின் நாயகன் சிலையை இடித்து உடைத்த செயல், தமிழர்களின் உள்ளத்தில் நெருப்பை அள்ளிக் கொட்டி இருக்கின்றது.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மீதான தடை, அண்ணா தி.மு.க. அரசால் பரிந்துரைக்கப்பட்டு, அப்பட்டமான பொய்களின் அடிப்படையில் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது, இத்தடை சட்டத்திற்கும் நீதிக்கும் எதிரானது என்று மறுமலர்ச்சி தி.மு.க. தொடர்ந்து போராடி வருகிறது.

இறையாண்மை உள்ள சுதந்திர தமிழ் ஈழ தேசம் என்ற இலட்சியத்திற்காக விடுதலைப் புலிகள் போராடுவதால், தமிழ்நாட்டையும் சேர்த்துத்தான் அவர்கள் தமிழ் ஈழ தேசம் அமைக்கக் கோருகின்றனர் என்று கூறி, அது இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரானது என்ற வாதத்தின் அடிப்படையில்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டின் ஒரு அங்குல மண்ணைக் கூடத் தமிழ் ஈழத்தில் சேர்க்க தந்தை செல்வா அவர்களோ, தலைவர் பிரபாகரன் அவர்களோ கனவிலும் எண்ணியது கிடையாது என்பதற்கு, அசைக்க முடியாத ஆவண சாட்சியங்களை, மத்திய அரசின் தீர்ப்பு ஆயத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் தடையை நீக்கக் கோரி நான் தொடுத்த ரிட் மனு மீதான வழக்கிலும் ஆதாரங்களுடன் முன்வைத்தேன். புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி மீண்டும் உயர்நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த ரிட் மனு நிலுவையில் உள்ளது.

தலைவர் பிரபாகரன் அவர்களுடைய உருவப் படம் பொறிக்கப்பட்ட பேனர்களை அகற்றுகின்ற வேலையில் அண்ணா தி.மு.க. அரசு ஈடுபட்டது. ஆனால், பொய்கைநல்லூர் தமிழர்கள் சிலை அமைத்து உள்ளனர். இப்போது அந்தச் சிலையை அகற்றி இருக்கலாம். ஆனால் இனி வரும் நாள்களில், தமிழ்த்தாயின் வீரத்திருமகன் பிரபாகரன் அவர்களின் சிலை தமிழகம் முழுமையும் எழும். இல்லந்தோறும் அவரது திரு உருவப் படம் அலங்கரிப்பதைத் தடுக்க முடியாது.

நாட்டின் கோடானுகோடித் தமிழர்களின் நெஞ்சங்களில், குறிப்பாக இளம் தலைமுறையின் இதயச்சுவர்களில் அழியாத ஓவியமாக பிரபாகரன் இடம் பெற்றுள்ளாரே, அதனை எந்தச் சக்தியாலும் அழிக்க முடியாது.

தெற்கு பொய்கை நல்லூரில், ஐயனார் கோவில் வளாகத்தில் கிராமத்து மக்கள் எழுப்பிய தலைவர் பிரபாகரன் சிலையை உடைத்து நொறுக்கிய அ.தி.மு.க. அரசைக் கண்டித்து, 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை பத்து மணி அளவில், நாகப்பட்டினம் வட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் துரை. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில், மாவட்டச் செயலாளர் மோகன் முன்னிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
MDMK chief Vaiko said in a statement that his party will protest on June 9th in Nagapattinam condemning ADMK government for damaging LTTE chief Prabhakaran's statue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X