அதிமுகவில் செந்தில்பாலாஜிக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு?
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அதிமுகவில் மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 2011ம் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறைக்கு அமைச்சராக இருந்தவர் கரூர் செந்தில்பாலாஜி. அதிமுகவில் செல்லப்பிள்ளையாகவும் வலம் வந்தார். ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலுக்குப் பின்னர் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. கரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். திடீரென கட்சியில் இருந்து டம்மியாக்கப்பட்டார்.
சட்டசபைத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அரவக்குறிச்சி தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் செந்தில்பாலாஜி. ஆனால், அரவக்குறிச்சி தொகுதிக்கான தேர்தலை தேர்தல் ஆணையமே தள்ளி வைத்துவிட்டது. இதற்கிடையில் செந்தில்பாலாஜி மீது பல சர்ச்சைகள் கிளம்பியது.
அரவக்குறிச்சி தொகுதிக்கு மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் செந்தில்பாலாஜிக்கு வாய்ப்பு கிடைக்காது என்று அதிமுகவினர் சொல்லி வந்தனர். அதற்கு காரணம், தற்போது கரூர் மாவட்ட செயலாளராக இருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கரை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செந்தில்பாலாஜி செயல்படுவதாக புகார் வந்தது. இதனால் செந்தில் பாலாஜி மீது கட்சித்தலைமை கடும் கோபத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

யாருக்கு இந்த பதிவு?
கட்சிப்பதவி இல்லை என்றாலும் ஃபேஸ்புக்கில் ரொம்ப ஆக்டிவ் ஆக இருக்கிறார் செந்தில் பாலாஜி.துரோகிகளை மன்னிக்கக் கூடாது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஸ்டேட்டஸ் போட்டார் செந்தில் பாலாஜி. ஆனால் யார் அந்த துரோகி என்று அவரது ஆதரவாளர்களுக்கு மட்டுமே வெளிச்சம். செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான பதிவுகள் போடப்பட்டுள்ளன.

ஸ்டேட்டஸ் போடும் செந்தில் பாலாஜி
காலம் மாறும், காட்சியும் மாறும் என்றும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பதிவிட்டுள்ளார். அம்மாவே சரணம் என்று ஒவ்வொரு முறையும் பதிவிட்டு வருகிறார். இதனிடையே செந்தில்பாலாஜிக்கு ஆதாரவாக மூத்த அமைச்சர் ஒருவர் செயல்பட்டு வந்தார். செந்தில்பாலாஜியை எப்படியாவது கார்டனுடன் ராசியாக்கிவிடவேண்டும் என செயல்பட்டதும் அந்த அமைச்சர்தானாம். இதற்கு செந்தில் பாலாஜி தேர்ந்தெடுத்த வழி, சசிகலா வழிதானாம்.

சசிகலாவிடம் சரண்டர்
விவேக் திருமண வரவேற்பு நடந்த அன்று தஞ்சாவூர் சென்று சசிகலாவை சந்தித்தாக சொல்கிறார்கள். சென்னை வந்த பிறகு சசிகலா பேசி சமாதானம் செய்ததாகவும், இரு தினங்களுக்கு முன்பு செந்தில்பாலாஜியை போயஸ் தோட்டத்திற்கு வரவைத்துப் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட செந்தில்பாலாஜிக்கு எந்த சிக்கலும் இருக்காது என்றும் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

மீண்டும் பதவி?
செந்தில்பாலாஜிக்கு விரைவில் கட்சியில் ஏதேனும் பொறுப்பு கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்றும் பேச்சு இருக்கிறது. செந்தில்பாலாஜி மீண்டும் முக்கிய பொறுப்புக்கு வரப்போகிறார் என்று ரகசியமாக தகவல்கள் கசியவே, கரூரை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் ரகசியமாக வந்து அவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்களாம்.

கரூரில் கண்டு கொள்ளாத கட்சிக்காரர்கள்
அதே நேரத்தில் செந்தில்பாலாஜி படித்த கரூர் அடுத்த தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியின் 50வது ஆண்டு விழா நேற்ற கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் லோக்சபா எம்.பி தம்பித்துரை, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் உள்பட பல முக்கிய வி.ஐ.பி க்கள் கலந்து கொண்டனர். ஆனால் ஒரு பெயரளவிற்கு கூட முன்னாள் மாணவர் என்ற முறையில் செந்தில் பாலாஜியை அழைக்கவில்லை என்பதுதான் முக்கிய அம்சம். இதனைக் குறிப்பிட்டு குமுறிக்கொண்டிருக்கிறார்கள் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications