ஜெயலலிதா உடல்நிலையால் தள்ளிப் போகிறதா சட்டமன்றக் கூட்டத் தொடர்?

Subscribe to Oneindia Tamil

தமிழக சட்டப் பேரவை எப்போது கூடப் போகிறது என்பது யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.

இந்தாண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் 25 ம் தேதி தாக்கல் செய்யப் பட்டது. அப்போதய முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். நான்கு நாட்கள் நடைபெற்ற கூட்டத் தொடர் பின்னர் தேதி குறிப்பிடப் படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

2015 -16 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இது என்பதால், அடுத்தாண்டு மார்ச் மாதம் வரைக்கும் அரசு செலவினங்களுக்கான தொகையை கருவூலத்திலிருந்து அரசு எடுப்பதற்கு வழி வகை செய்யப் பட்டுவிட்டது.

Will TN Assembly meet to discuss budget session?

ஆனால் மானியக் கோரிக்கைகளுக்கு எவ்வாறு பணத்தை செலவிட வேண்டும் என்பதை முடிவு செய்வதற்குத் தேவைப்படும் விவாதங்கள் நடக்க வேண்டியிருக்கிறது.

அதற்குப் பிறகுதான் இந்த மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு ஒவ்வோர் துறைக்கும் எவ்வாறு பணத்தை செலவிடப் பட வேண்டும் என்பது முடிவு செய்யப் படும். மானியக் கோரிக்கைகளுக்கான நிதியும் ஒதுக்கப் பட்டுவிட்டது.

ஆனால் ஒவ்வோர் துறைக்கும், எந்தெந்த திட்டங்களுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப் பட வேண்டும் என்பதற்காகத்தான் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தேவைப்படுகின்றன. 43 மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற வேண்டியிருக்கிறது.

கடந்த 2014 ம் ஆண்டில் இதே போன்றுதான் முதலில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப் பட்டது. பின்னர் ஐந்து மாதங்கள் இடைவெளி விட்டு ஆகஸ்டில்தான் மீண்டும் சட்டசபை கூடி மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றியது. அதற்கு காரணம் மக்களவைத் தேர்தல்கள். ஆனால் இந்த முறை ஜெயலலிதா சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவியிழந்த நிலையில் சட்டமன்றக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

ஜெயலலிதா கர்நாடக உயர்நீதி மன்ற தீர்ப்பில் வெற்றிப் பெற்ற பின்னர் மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றுதான் பட்ஜெட் கூட்டத் தொடர் ஒத்திவைக்கப் பட்டது. இது எல்லோருக்கும் தெரிந்த, ஆனால் ஆளும் கட்சி வெளிப்படையாக அறிவிக்காத விஷயம். தற்போது ஜெயலலிதாவும் வழக்கில் வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், இடைத் தேர்தலிலும் வென்று எம்எல்ஏ வாகவும் ஆகிவிட்டார். ஆனால் சட்டமன்றம் எப்போது கூட்டப்படப் போகிறதென்பதுதான் தெரியவில்லை.

பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்து நூறு நாட்கள் ஆகி விட்ட நிலையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்காதது சட்டமன்ற ஜனநாகத்துக்கு விரோதாமானது என்று திமுக சட்ட மன்றக் குழுத் தலைவர் முக ஸ்டாலின் பேசுகிறார். மக்கள் பிரச்சனைகளைப் பேசுவதற்கு சட்டமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்கிறார் அவர். ஆளும் தரப்பு வாய் திறக்காவிட்டாலும், ஜெயலலிதாவுக்கு எப்போதுமே ஜால்ரா தட்டி வரும் சில உதிரிக் கட்சி எம்எல்ஏ க்கள் சட்டமன்றத்தை எப்போது கூட்ட வேண்டும் என்று அம்மா வுக்குத் தெரியும் என்று வக்கனையாகப் பேசுகின்றனர்.

ஆனால் ஆளும் அஇஅதிமுக வோ, அதன் சர்வ வல்லமை பொருந்திய தலைமையோ எந்த சலனமுமின்றி கனத்தை மெளனத்தையே பதிலாக தந்து கொண்டிருக்கின்றனர்.

இதனிடையே ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி வந்து கொண்டிருக்கும் ஊர்ஜிதமாகாத செய்திகளும், திமுக தலைவர் இது பற்றி பேச ஆரம்பித்திருப்பதும் பிரச்சனைக்கு புதிய பரிமானத்தைத் தந்து கொண்டிருக்கிறது. கடந்த ஜூன் 3 ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் எம்எல்ஏ, ஜெ அன்பழகன், ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி வந்து கொண்டிருக்கும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக ஒரு அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரினார்.

நேற்று, ஜூலை 7 ம் தேதி கருணாநிதி ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது சற்று காட்டமாகவே ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றிப் பேசினார். ‘இந்தியாவில் முதலமைச்சரே இல்லாத மாநிலம் தமிழகம் மட்டும்தான். இங்கு முதலமைச்சருக்கு வேலை இல்லை. காரணம் வேலை செய்ய முதலமைச்சரின் உடல் நலம் ஒத்துழைக்கவில்லை. ஒரு ஜனநாயக நாட்டில் முதலமைச்சரின் உடல் நலம் பற்றி எல்லா தகவல்களையும் அறிவிப்பதுதான் ஜனநாயகத்துக்கு நல்லது. ஆகவே முதலமைச்சரின் உடல நலம் பற்றி அரசு தெரிவிக்க வேண்டும்' என்று கூறினார். வெளிப்படையாகவே கருணாநிதி ஜெயல லிதாவின் உடல் நிலை பற்றிப் பேசத் துவங்கி விட்டார்.

ஆகவே தற்போது சட்டமன்றக் கூட்டத் தொடர் கூட்டப் படாமல் இருப்பதற்கு முதலமைச்சரின் உடல் நிலைதான் காரணமா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ‘இது நியாயமான சந்தேகம்தான். பதவியேற்பின்போது தேசிய கீதம் சுருக்கமாக வாசிக்கப் படுகிறது. 28 அமைச்சர்கள் தலா 14 பேர் என்று இரண்டு குழுக்களாக பதவியேற்றுக் கொள்ளுகிறார்கள். முதலமைச்சர் எம்எல்ஏ வாக பதவியேற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியில் ஜெயா டிவி மற்றும் அரசு புகைப்படக் காரரைத் தவிர வேறெவரும் அனுமதிக்கப் படவில்லை. தலைமைச் செயலகம் வரும் முதலைமச்சர் முப்பது நிமிடங்களுக்கு மேல் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளுவதில்லை.

இவற்றைப் பார்க்கும் போது சட்டமன்றத்தைக் கூட்டாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ள நாம் விஞ்ஞானிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அரை மணி நேரம் கூட அமர முடியாத முதலைமச்சர் எவ்வாறு சட்ட மன்றத்தில் மணிக் கணக்கில் அமர்ந்து விவாதங்களில் பங்கு பெறப் போகிறார் என்று எனக்குத் தெரியவில்லை' என்று என்னிடம் கூறினார் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர்.

ஆனால் கிட்டத்தட்ட அனைத்து எம்எல்ஏ க்களும் சட்ட மன்றக் கூட்டத் தொடருக்காக ஆவலுடன்தான் காத்துக் கொண்டிருக்கின்றனர். ‘நாங்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. எங்கள் தொகுதிப் பிரச்சனைகள் மாத்திரமல்ல, தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சனைகளும் ஏராளமாக காத்துக் கொண்டுள்ளன. அவற்றை விவாதிக்க, இந்தப் பிரச்சனைகள் மீது அரசின் கவனத்தை ஈர்க்க சட்டமன்றம் உடனே கூட்டப்பட வேண்டியது அவசியமானதாகும். ஆனால் எப்போது கூட்டப் போகிறார்கள் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை' என்று என்னிடம் கூறினார் மனித நேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜாவஹிருல்லா.

இந்த முறை மானியக் கோரிக்கைகள் மீது நடக்கும் விவாதம்தான் ஜெயலலிதா ஆட்சியின் கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் விவாதமாகும். ஏனெனில் அடுத்தாண்டு தேர்தல் ஆண்டு என்பதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே சமர்ப்பிக்கப்படும்.
43 மானியக் கோரிக்கைகளை விவாதித்து நிறைவேற்ற குறைந்தது ஒரு மாத காலமாவது சட்ட மன்றம் நடக்க வேண்டும். அல்லது நாளொன்றுக்கு ஐந்திலிருந்து ஏழு மானியக் கோரிக்கைகள் என்று ஒரு வாரம் முதல் பத்து நாட்களுக்குள் கூட சட்ட மன்றக் கூட்டத் தொடரை நடத்தி முடித்து விடலாம். அல்லது ஒரே நாளில் கூட ஒட்டு மொத்த மானியக் கோரிக்கைகளையும் நிறைவேற்றி கூட்டத் தொடரை முடித்து விடலாம். இவ்வாறு நடந்ததற்கான முன்னுதாரங்கள் உண்டு என்கிறது ஆளும் கட்சி.

ஜனநாயகத்தை குதறி, குற்றுயிராய், கொலை உயிராய் அஇஅதிமுக ஆக்கியதற்கு ஏராளமான முன்னுதாரங்கள் தமிழக வரலாற்றில் உண்டுதான். அந்த வரிசையில் மற்றுமோர் சாதனையை அஇஅதிமுக செய்ய முற்படலாம். ஆனால் ஒன்று மட்டும் உண்மை. ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி அரசல் புரசலாய் பேசப் பட்டு வந்த நிலைமை மாறி, இன்று கொஞ்சம் கொஞ்சமாய் மீடியாக்களும், அரசியல் கட்சிகளும் வெளிப்படையாகப் பேசத் துவங்கி விட்டன.

இந்த நிலையிலும் தான்தோன்றித்தனமாய் ஆளும் கட்சி நடந்து கொள்ள வாய்ப்புகள் உண்டுதான். மறுப்பதற்கில்லை. ஆனால் மக்கள் மன்றத்தில் விவகாரம் வந்து விட்ட சூழ்நிலையில் இதற்கான அரசியல் விலை மிகப் பெரியதாகவே அமையும் அஇஅதிமுகவுக்கு. இதைப் பற்றி எல்லாம் கவலைப் படும் நிலைமையை ஜெயலலிதா கடந்து விட்டிருக்கலாம். ஆனால் நிச்சயம் அஇஅதிமுக கடக்கவில்லை என்பதே உண்மை!

-ஆர்.மணி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+