பிற கட்சிகளை விடுங்கள்.. தனித்து போட்டியிடுவதால் தேமுதிகவுக்கு நன்மை உண்டா?
சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிக கட்சி தனித்து போட்டியிடும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ள நிலையில், அதனால் பிற கட்சிகளுக்கு சாதகமோ, அல்லது பாதகமோ அவரது கட்சி நிலைமை என்னவாகும் என்பதே தேமுதிக தொண்டர்கள் மத்தியில் நிலவும் பேச்சாக உள்ளது.
தேமுதிக கட்சியை விஜயகாந்த் ஆரம்பித்தது 2005ல். அடுத்த வருடத்திலேயே சட்டமன்ற தேர்தலை எந்த கூட்டணியும் இன்றி தனியாக சந்தித்தார்.
அப்போது அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. ஆனால் திமுகவும் தனிப்பெரும்பான்மை பெறாமல் காங்கிரஸ் தயவோடு கூட்டணி ஆட்சியை அமைத்தது.

வாக்கு பிரிப்பு
இவ்விரு கட்சிகளுக்கும் அடி விழ காரணம் விஜயகாந்த் ஓட்டுக்களை பிரித்ததுதான். ஏனெனில் அரசுக்கு எதிரான வாக்குகள் மட்டுமின்றி அதிமுகவுக்கு ஆதரவான வாக்குகளிலும் கணிசமானவை தேமுதிகவிற்கு சென்றிருந்தது.

வாக்கு வங்கி
விஜயகாந்த் வெற்றி பெற்ற விருத்தாசலம் தொகுதியில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தது இதற்கு ஒரு உதாரணம். அதிமுக, திமுக தவிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருந்த மக்களுக்கு, தேமுதிக ஒரு மாற்றாக தெரிந்ததால், முதல் தேர்தலிலேயே அதன் வாக்கு வங்கி 10 சதவீதத்தை தொட்டது.

தனித்து போட்டி
2009ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை விஜயகாந்த் கட்சி பிரித்தது. இருப்பினும் வெற்றி பெற முடியவில்லை.

ஜெயலலிதாவுடன் கூட்டணி
தங்களுடைய வாக்குகள் விஜயகாந்த் மூலமாக பிரிவதை உணர்ந்துதான் தேமுதிகவை, அதிமுக கூட்டணியுடன் இணைய வைத்தார் ஜெயலலிதா. 2011ம் ஆண்டில் அதிமுக, தேமுதிக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது.

கழற்றி விட்ட அதிமுக
வேலை முடிந்ததும், விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். ஆனால் அதிமுகவோடு கூட்டணி வைத்தவர் என்பதால் விஜயகாந்த்தின் தனித்துவம் பறிபோனது. இது அவரது கட்சியின் வாக்கு வங்கியை கடந்த லோக்சபா தேர்தலில் 5 சதவீதத்திற்கு சரித்து கொண்டு சென்றபோதே புரிந்தது.

விஜயகாந்த் முயற்சி
இதை உணர்ந்துதான், காவிரியின் குறுக்கே, கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட திட்டமிட்டுள்ளதை எதிர்த்து, எதிர்க்கட்சிகளை அழைத்து டெல்லி சென்றார் விஜயகாந்த். அவரது தயவு தேவைப்படும் என நினைத்து திமுகவும் தனது உறுப்பினர்களை அனுப்பி வைத்தது.

சொதப்பிய விஜயகாந்த்
ஆனால் டெல்லியில் அவர் பத்திரிக்கையாளர்கள் முன், தூக்கியடித்துவிடுவேன் என்று கூறி, நடந்து கொண்டவிதம் அவரது செல்வாக்கை உயர்த்துவதற்கு பதிலாக படுகுழியில் தள்ளிவிட்டது. அவரோடு சென்ற பிற கட்சியினரை தர்ம சங்கடப்படுத்திவிட்டது.

தனித்தன்மை போயிருமே
இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் திமுகவோடு கூட்டணி அமைத்தால் இரு திராவிட கட்சிகளோடும் கூட்டணி வைத்தவர் என்ற பெயரை பெற்று தனது தனித்தன்மையை இழக்க வேண்டியிருக்கும் என்ற அச்சத்தால் தனித்து போட்டி என அறிவித்துள்ளார் விஜயகாந்த்.

நெடுங்காலத்திற்கான திட்டம்
தேமுதிக வளர்ச்சிக்கு, நெடுங்காலத்திற்கான விதை இந்த முடிவு என்றபோதிலும், வரும் சட்டசபை தேர்தலில் அக்கட்சி தாக்குப்பிடித்தாக வேண்டியது கட்டாயம். தனித்து போட்டியிடும் முடிவால் திமுகவுக்கு இழப்பு, அதிமுகவுக்கு ஆதாயம் என அரசியல் கணக்குகள் சொல்கின்றன.

கூட்டணி கணக்கு
தேமுதிகவுக்கு இந்த முடிவால் லாபம் என இதுவரை எந்த அரசியல் விமர்சகர்களும் கூறவில்லை. இதை லேட்டாக உணர்ந்துதான், தேமுதிக தலைமையில் கூட்டணி அமைக்க பிற கட்சிகள் முன்வந்தால் பரிசீலிப்போம் என பிரேமலதா அறிவித்தார்.

சதவீதம் கூடலாம்
தேமுதிக தற்போது கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க ஆயத்தமாகிறது. திருமாவளவனும் இக்கூட்டணியில் இணைந்தால் விஜயகாந்த்தின் 5 சதவீத வாக்கு வங்கியும், கூட்டணியின் வாக்கு வங்கியுமாக சேர்வதோடு, நம்பக்கதன்மை காரணமாக கூடுதலாக 5 சதம் வாக்குகளும் விழ வாய்ப்புள்ளது.

தொங்கு சட்டசபை
இவ்வாறு ஒரு கூட்டணி அமைந்தால் தொங்கு சட்டசபை அமைந்தால் கூட்டணி ஆட்சி அமைக்க தேமுதிக கூட்டணிக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அப்படி ஒரு நிலை வந்தால் கட்சியை வளர்க்க முடியும். ஆனால், வேறு கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைத்தாலோ, தேமுதிகவிலிருந்து மேலும் பல முக்கிய தலைவர்கள் வெளியேறுவதை தடுக்க முடியாது.

சூதாட்டம்
ஒருவகையில், கேப்டன் எடுத்துள்ள முடிவு ஒரு சூதாட்டத்தை போன்றது. அடுத்தகட்டமாக விஜயகாந்த் எடுக்கும் கூட்டணி நகர்வுகளே அவரை அரசியலில் தக்க வைக்கும். அல்லது மதிமுக போல தேய்ந்து போவது நிச்சயம்.












Click it and Unblock the Notifications