தர்மபுரி: கடும் வறட்சியால் படுபாதளத்தில் நிலத்தடி நீர்- 3,000 தென்னை மரங்கள் கருகின
அரூர்: தர்மபுரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால் 3 ஆயிரம் தென்னை மரங்கள் பட்டுப்போய்விட்டன. இதனால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக சரிவர பருவமழை பெய்யவில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் குறைந்து படுபாதளத்திற்கு தள்ளப்பட்டு விட்டது.

குடிநீருக்கே வழியில்லை
கிணறு, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு, சுமார் ஆயிரம் அடி அளவுக்கு ஆழ்துளை கிணறு அமைத்ததாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. குடிநீருக்கு கூட வழியின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பட்டுப்போன பனைமரங்கள்
இந்நிலையில், கம்பைநல்லூர் பகுதியில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பனைமரங்கள் அனைத்தும் காய்ந்து முறிந்து விழத் தொடங்கிவிட்டன. அவற்றை செங்கல் சூளைகளுக்கு வெட்டி பயன்படுத்தி வந்தனர்.

தென்னை மரங்களின் கதி
தற்போது, தண்ணீர் இன்றி தென்னை மரங்கள் காய்ந்ததை அடுத்து, தென்னை மரங்களையும் வெட்டி செங்கல் சூளைகளுக்கு பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

3000 தென்னை மரங்கள்
கம்பைநல்லூர் பகுதியில் கடும் வறட்சி காரணமாக, சுமார் 3 ஆயிரம் தென்னை மரங்கள் முற்றிலும் காய்ந்து பட்டுப்போய் கீழே விழுந்துள்ளன.

மழையை நம்பும் மக்கள்
இந்த ஆண்டும் பருவமழை மழை பொய்த்து போனால், விவசாயம் என்பதே கேள்விக்குறியாகும் நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மழை வருமா? வருணபகவான்தான் மனது வைக்கவேண்டும் என்று வேண்டுகின்றனர் விவசாயிகள்.












Click it and Unblock the Notifications