கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம்
கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூர் அருகே சாலை பணிக்காக பள்ளம் தோண்டியபோது, மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்து அங்கு புதைத்து சென்றுள்ளனர். அந்த பெண் எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்ணின் உடலில் இருந்த டாட்டூ மற்றும் கொலுசை வைத்து அவர், வடலூர் ஓபிஆர் நகரை சேர்ந்த மஞ்சுளா என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முகம் சிதைக்கப்பட்டு பெண்ணின் உடல்
கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையில் உள்ள கன்னுத்தோப்பு பாலம் அருகே புறவழி சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வழக்கம் போல் இன்று நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது இன்று காலையில் அப்பகுதியில் பள்ளம் தோண்டும் போது 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் கால் தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் பள்ளம் தோண்டும் பணியை உடனடியாக நிறுத்தினர்.
உடனடியாக அவர்கள் இது குறித்து வடலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில், நெய்வேலி டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உடலை மண்ணில் இருந்து தோண்டி எடுத்த போது, அவரது உடலில் முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. மேலும் கால்களில் நாய் கடித்தற்கான காயங்களும் இருந்தன.
கையில் இருந்த டாட்டூ
உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. வடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இளம்பெண் யாராவது மாயமாகி போலீசில் புகார் கொடுக்கப்பட்டு இருந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அப்படி எந்த புகாரும் வரவில்லை என்பதும் தெரியவந்தது.
இதனால் அந்த பெண்ணை வேறு எங்கோ கொலை செய்து பிணத்தை வடலூர் பகுதியில் புதைத்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். மேலும் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டரா ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டது வடலூர் ஓபிஆர் நகரை சேர்ந்த மஞ்சுளா என்பது தெரியவந்தது. சென்னையில் உள்ள மகளை பார்த்துவிட்டு வந்தபோது கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.
கொலையாளி யார்?
அதாவது பெண்ணின் கையில் உள்ள டாட்டூவை வைத்தும், அவர் அணிந்திருந்த கொலுசினை வைத்தும் போலீசார் கண்டுபிடித்ததாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், மஞ்சுளாவின் கணவர் கண்ணன். இவர்களது மகள் சென்னையில் தங்கி பகுதி நேரமாக வேலை செய்து வருகிறார். மகளை பார்ப்பதற்காக மஞ்சுளா சென்னை சென்று இருக்கிறார்.
பின்னர் புதன்கிழமை இரவு அவர் சென்னையில் இருந்து வடலூருக்கு பஸ் ஏறி இருக்கிறார். நேற்று காலையிலேயே அவர் வீட்டுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் வரவில்லை என்பதால் மஞ்சுளாவை உறவினர்கள் தேடி அலைந்துள்ளனர். நேற்று முன் தினம் இரவு 11 மணி வரை அவரது செல்போன் ஆனில் இருந்ததாகவும், அதற்கு பிறகு தான் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் கணவர் முருகனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையில் இருந்து இவர் எப்போது கிளம்பினார்? எப்படி கொலை செய்யப்பட்டார்? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வடலூர் அருகே பெண் ஒருவர் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications