ராம்குமாருக்கு ஜாமீன் வழங்க பெண் வக்கீல்கள் கடும் எதிர்ப்பு.. விசாரணை ஜூலை 15க்கு ஒத்தி வைப்பு
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு ஜாமீன் அளிக்க பெண் வக்கீல்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்ததாலும், அரசுத் தரப்பில் ஆட்சேபனை தெரிவித்ததாலும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு மீதான விசாரணையை நீதிபதி ஜெயச்சந்திரன் ஜூலை 15ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அதேசமயம், இந்த எதிர்ப்புக்கான காரணம் என்ன என்பதை எழுத்துப் பூர்வமாக அரசுத் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
சுவாதி படு கொலை வழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்ய்பட்டுள்ளார். அவரை சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் ராம்குமார் தரப்பில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. அவரது சார்பில் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி இந்த வழக்கை நடத்தவுள்ளார்.

இந்த மனுவில், சுவாதியின் கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. நான் ஒரு அப்பாவி. சுவாதியை கொலை செய்த உண்மையான குற்றவாளியை கைது செய்யாமல், கிராமப்புறத்தை சேர்ந்த ஏழையான என்னை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் கைது செய்யும் போது, என் கழுத்தை நானே அறுத்துக் கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், நான் அறுக்கவில்லை. போலீசாருடன் வந்தவர்கள் தான் என் கழுத்தை பிளேடால் அறுத்தனர். எனவே, எனக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்த மனுவை ராம்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் அனுமதி பெறாமலேயே வக்கீல் கிருஷ்மூர்த்தி தாக்கல் செய்திருப்பதாக ஒரு சர்ச்சை கிளம்பியது. இந்த நிலையில் இம்மனு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகர அரசு வக்கீல் ஜெகன் ஆஜராகி, இந்த ஜாமீன் மனு ராம்குமாருக்கு தெரியாமலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராம்குமார் மருத்துவமனையில் மயங்கிய நிலையில் சிகிச்சை பெறும்போது, அவரிடம் ஜாமீன் மனு தாக்கல் செய்வது குறித்து யாரும் அணுகவில்லை.
இந்த மனுவை தாக்கல் செய்ய ராம்குமாரிடம் வக்காலத்து மனு வாங்கவில்லை. அவரது உறவினர்களிடம் கூட அனுமதியை பெறாமல், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மனுவை முதலில் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி வாதிடுகையில் ஜாமீன் மனுக்களை மனுதாரரிடம் வக்காலத்து பெற்று தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ராம்குமார் சார்பாகத்தான் இதை வழக்கறிஞர் மகேந்திரன் தாக்கல் செய்துள்ளார். அவருக்காக நான் வாதாடவுள்ளேன் என்றார்.
இந்த நிலையில் சில பெண் வக்கீல்கள் திரண்டு வந்து ராம்குமார் செய்தது மிகப் பெரிய கொடும் செயல். அவருக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என்று நீதிபதிக்குக் கோரிக்கை விடுத்தனர். மேலும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக ஒரு வக்கீல் ஆஜராகி, ஜாமீன் தரக் கூடாது என்று தான் வாதாடவுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 15ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், அன்றைக்குள் ஏன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது என்பது குறித்து எழுத்துப் பூர்வமாக மனு தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications