அச்சச்சோ.. செவ்வாய்க்கிழமை மார்கழி பிறந்து விட்டதே.. ஆண்களுக்கு தோஷமாம்.. பெண்கள் பீதி!
புதுச்சேரி: மார்கழி மாதம் இந்த ஆண்டு செவ்வாய்க்கிமை பிறந்ததால் ஆண்களுக்குத் தோஷம் என்று தகவல் பரவியதால் புதுச்சேரியில் பெண்கள் சிறப்பு அகல் விளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
அவ்வப்போது ஏதாவது ஒரு வதந்தியைக் கிளப்புவது சகஜம். சகோதரிகளுக்குப் பச்சை சேலை எடுத்துத் தர வேண்டும். சகோதரர்களுக்கு இந்தக் கலரில் டிரஸ் எடுத்துத் தர வேண்டும் என்று கிளப்பி விடுவார்கள்.

இந்த ஆண்டு செவ்வாய்கிழமை மார்கழி மாதம் பிறந்தது. இதை வைத்து புதுப் புரளி கிளம்பி விட்டது புதுச்சேரியில், ஆண்களுக்கு தோஷம் ஏற்படும் என தகவல் பரவியதால், தோஷத்தை போக்க வீட்டில் அகல் விளக்கேற்றி வழிபட வேண்டும் என்று சிலர் கூறினார்கள்.
இதையடுத்து புதுவை அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள 300 க்கும் மேற்பட்ட வீடுகளில் நேற்று பெண்கள் வீட்டு வாசலில் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். அவர்கள் வாழை இலைபோட்டு அதில் பச்சரிசியை பரப்பி அதன் மீது அகல் விளக்கை ஏற்றினார்கள்.
இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, இந்த ஆண்டு மார்கழி மாதம் செவ்வாய் கிழமை பிறந்ததால் அது ஆண்களுக்கு தோஷம் என்று கூறுகின்றனர். அதனால் அகல் விளக்கேற்றி வழிபடுகிறோம் என்றனர்.
இதேபோல் தவளக்குப்பத்தை அடுத்த கொருக்குமேடு பகுதியிலும் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர்.












Click it and Unblock the Notifications