கொழும்பு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரத்து - வைகோவுக்கு உலகத் தமிழர்கள் நன்றி
சென்னை: உலகத் தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இலங்கையில் நடத்தத் திட்டமிட்டிருந்த சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளதால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு உலகத் தமிழர்கள் நன்றி தெரிவித்தனர்.
இது தொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"கொடியவன் கோத்தபாய ராஜபக்ச கூட்டம் பின்னணியில் செய்திருக்கிற ஏற்பாட்டில் இலங்கையில் இசை நிகழ்ச்சி என்ற பெயரில் உலக நாடுகளை ஏமாற்றும் வேலைக்கு ஏற்பாடாகி இருந்தது. ஈழத்தில் நடைபெற்ற படுகொலைகளை மறைப்பதற்காக நரித் தந்திரத்தோடு இந்த இசைவிழாவை நடத்த ஏற்பாடாகி இருந்தது.

ஒரு தனியார் தொலைக்காட்சி இசைக் குழுவினரும், இலங்கைக் கலைப் படைப்பினரும் இணைந்து இந்த இசைவிழாவை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மார்ச் 1ம் தேதி கொழும்பு மருதானை, புனித வளனார் கல்லூரியிலும், மார்ச் 02ம் தேதி பம்பலப்பட்டி கதிரேசன் மண்டபத்திலும் நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாட்டிலுள்ள தனியார் தொலைக்காட்சியில் பாடல் இசைக்கும் கலைஞர்கள் நேற்றே இலங்கை தலைநகர் கொழும்பு சென்றனர்.
இந்த தகவலை அறிந்த வைகோ, ரோமாபுரி பற்றி எரிந்த போது நீரோ பிடில் வாசித்தது போல தனியார் தொலைக்காட்சி இசைக் கலைஞர்கள் அங்கு பாடப் போகிறார்களா? ஈழத் தமிழர்கள் எழுப்பிய மரண ஓலம் இன்னும் அங்கு காற்றில் கலந்து தான் இருக்கிறது. காயப்பட்டுப் போன தமிழர்கள் மனங்களில் நெருப்பைப் போடும் வேலையில் விஜய் தொலைக்காட்சி ஈடுபட வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
கொழும்பில் இருந்து வெளிவருகின்ற பிரபல தமிழ் செய்தித்தாள்களில் இச்செய்தி வந்துள்ளது. இதையறிந்த உலகத் தமிழர்கள் தொலைபேசியில் வைகோவை அழைத்து தங்கள் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்கள்.
-இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications