புதிய வீட்டை எழுதித் தர மறுத்த பெற்றோர்.. கோபத்தில் தாயைக் கொன்ற மகன் நண்பருடன் கைது
கோவை: தந்தை புதிதாக கட்டி வரும் வீட்டை தனது பெயருக்கு மாற்றி எழுதித் தர மறுத்ததால் ஆத்திரத்தில் தாயைக் கொலை செய்து கொள்ளை நாடகமாடிய மகனை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த கெட்டிமல்லன்புதூரைச் சேர்ந்த இராமசாமியின் மனைவி காவேரி (59). இவர்களுக்கு 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இதில் 5 பேருக்கு மணமாகிவிட்டது. ஆனால், இளைய மகன் ஆறுமுகத்துக்கு (21) மட்டும் இன்னும் மணமாகவில்லை.
இந்நிலையில் ராமசாமி புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். அதனை தனது மூத்தமகனுக்கு தருவதற்கும் அவர் திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆறுமுகம் தனது பெற்றோர் மேல் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இதற்கிடையே கட்டிட வேலை காரணமாக ராமசாமி தனது இரு மகன்களுடன் புதிய வீட்டில் தக்கி விட நேற்று முன்தினம் இரவு காவேரி மட்டும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆறுமுகம், தனது நண்பர்கள் உதவியோடு காவேரியைக் கொலை செய்து விட்டார்.
ஆனால், நேற்று காலை ஆனைமலை போலீசாருக்கு போனில் தகவல் தெரிவித்த ஆறுமுகம் தனது தாயாரை மர்மநபர்கள் நகைக்காக கொலை செய்து விட்டதாக நாடகமாடியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காவேரியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆறுமுகத்திடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் தனது தாயாரைக் கொலை செய்ததை ஆறுமுகம் ஒத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து ஆறுமுகத்தைப் போலீசார் கைது செய்தனர்.
மேலும், இக்கொலை சம்பவத்துக்கு உதவிய அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகத்தின் நண்பரான தேவராஜைக் கைது செய்த போலீசார், மற்றொரு நண்பரான அருண் என்பவரைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications