அன்பை போதிக்கும் அதிராம்பட்டினம்.. 2 இந்து பெண் உடல்களை அடக்கம் செய்த முஸ்லிம்கள்! தொடர் சம்பவங்கள்
தஞ்சாவூர்: அதிராம்பட்டினத்தில் கடந்த 3 நாட்களில் உயிரிழந்த 2 இந்து பெண்களின் உடல்களை இஸ்லாமியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சுமந்து சென்று இந்து முறைப்படியே நல்லடக்கம் செய்து இருப்பது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்து இருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் மத நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழும் பகுதியாகும். மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக இங்கு பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் இங்குள்ள கோயில் திருவிழாவுக்கு வெயிலில் வந்த இந்து பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குளிர்பானம், மோர், தண்ணீர் போன்றவற்றை வழங்கினார்கள்.

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு நிகழ்வுகள் இங்கு நடந்து வருகின்றன. இங்கு இஸ்லாமிய அமைப்புகளின் ஆம்புலன்ஸுகள் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் ஆதரவற்ற பலரது உடல்களை இப்பகுதியை சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகள் அவர்களது மத சம்பிதயாப்படியே அடக்கம் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் அதிகாலை 3.30 மணியளவில் அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை பகுதியில் உள்ள இல்லத்தில் செல்லம்மாள் என்ற 92 வயது முதாட்டி உயிரிழந்தார். ஆதரவற்ற அந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்யவோ, இறுதிச் சடங்கு செய்யவோ அவரது பேத்தியால் முடியவில்லை. எனவே அவரது பேத்தி கார்த்திகா அப்பகுதியை சேர்ந்த எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்களை நாடினார்.

உயிரிழந்த மூதாட்டி செல்லம்மாள் என்பவரை அடக்கம் செய்து தர அதிரை எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகளிடம் அவர் மனு கொடுத்தார். அதன் பேரில் எஸ்டிபிஐ கட்சியின் நகர துணைச்செயலாளர் அஹமது தலைமையில், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ஷேக் தாவூத், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஹமது அஸ்லம், SDTU தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது யூசுப், நகர செயலாளர் ரஜபு முகைதீன், சமூக ஆர்வலர் சாகுல் ஹமீது உள்ளிட்டோர் அவருக்கு உதவ முன்வந்தனர்.
மூதாட்டி செல்லம்மாள் உடலை அவரது வீட்டில் இருந்து எஸ்டிபிஐ கட்சியின் ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றினார். அந்த ஆம்பிலன்ஸில் மூதாட்டின் உடலை வைத்தபடியே அவரது பேத்தி பானையுடன் ஆம்புலன்சில் சுற்றி வந்து இறுதிச்சடங்கை நிறைவேற்றினார். அதன் தொடர்ச்சியாக அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகில் உள்ள அடக்கஸ்தலத்தில் இந்து மத முறைப்படி மூதாட்டி செல்லம்மாள் உடலை அவர்கள் நல்லடக்கம் செய்தனர்.

உடலை நல்லடக்கம் செய்த SDPI கட்சியினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். இதற்கு 2 நாட்களுக்கு முன்பாகவும் அதிராம்பட்டினத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் அடக்கம் செய்தார்கள். அலையாத்திக் கடலோரம் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், இஸ்லாமியர்கள் போலீஸ் துணையுடன் அடக்கம் செய்தார்கள்.
3 நாட்களில் 2 இந்து பெண்களின் சடலங்களை இப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் அவர்களின் மத சடங்கின்படி நல்லடக்கம் செய்து மனத நேயத்தை காட்டி இருக்கிறார்கள். இதற்கு முன்பாகவும் இதேபோல் ஏராளமான ஆதரவற்ற இந்துக்களின் சடலங்கள் இப்பகுதி இஸ்லாமியர்களால் அடக்கம் செய்யப்பட்டு உள்ளன. இப்படி மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான பகுதியாக அமைந்து உள்ளது அதிராம்பட்டினம்.












Click it and Unblock the Notifications