Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 முறை நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியலையே.. பட்டுக்கோட்டை மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் மத்திய அரசின் நீட் நுழைவுத் தேர்வை 2 முறை எழுதியும் தேர்ச்சி பெற முடியாததால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சிலம்பவேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நீட் தற்கொலைகள் தொடருவதால் நீட் நுழைவுத் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை அருகே சிலம்பவேளங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் (வயது 20) என்ற மாணவர் நீட் தேர்வு முடிவுகளால் மனமுடைந்து தன்னையே மாய்த்துக் கொண்டுள்ளார். அவர் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியிருக்கிறார். மருத்துவக் கல்வி பெற முடியவில்லை என்னும் அழுத்தத்தால் இத்தகைய பலிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களும், உச்சநீதிமன்றமும் ஏனோ கண்டு கொள்ளவில்லை.

neet neet suicide

படித்துச் செழித்து, சமூகத்துக்குப் பயன் தர வேண்டிய குருத்துகளைப் பலி கொண்டபடி தொடர்கிறது நீட் என்னும் கொடூரம். தமிழ்நாட்டில் இதுவரை 20–க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள். நீட் தேர்வுக்காக பண்ணைகளைப் போல பயிற்சி மய்யங்கள் நிறைந்த ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மட்டுமே கடந்த 5 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களை மாய்த்துக் கொண்டு மரணம் அடைந்துள்ளனர்.
இத்தனைக்குப் பிறகும் இந்தக் கொடுமை நீடிப்பதை மக்கள் நலம் விரும்பும் எவரும் ஏற்கமாட்டார்கள். மாணவர்கள் ஒருபோதும் இத்தகைய முடிவுகளை எடுக்கக் கூடாது; அரசு இந் நிலைக்கு மாணவர்களைத் தள்ளக் கூடாது. மாணவர் தனுஷ் மறைவுக்கு நமது இரங்கலைத் தெரிவிக்கலாம்; அவரது குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கு எப்படி ஆறுதல் சொல்வது? நீட்டை ஒழிப்பதற்கான நமது போராட்டத்தின் வெற்றியால் தான் அதைச் செய்ய முடியும்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த சிலம்பவேளாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மற்றும் இவரது மனைவி சாந்தி. விவசாய கூலித்தொழிலாளர்களான இவர்களது இரண்டாவது மகன் தனுஷ் கடந்த 2021ஆம் வருடம் பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்து, இரண்டு ஆண்டுகளாக 'நீட்’ தேர்வு எழுதி வந்தார். அதில், அவர் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், நேற்று காலை பெற்றோர் கூலிவேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த தனுஷ், தனது வீட்டில் தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியாமல் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது. மகனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

2017 ஆம் ஆண்டு அரியலூர் மாணவி அனிதா தொடங்கி, இதுவரையில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ்நாட்டில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்துவதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டு மாணவர்களை மீண்டும் மீண்டும் தற்கொலைக்கு தள்ளுவது கடும் கண்டனத்துக்கு உரியது.

தமிழ்நாட்டில் தொடங்கிய நீட் எதிர்ப்பு வட மாநிலங்களிலும் எதிரொலிக்க தொடங்கிய நிலையில், நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளும் ஊழல்களும் அம்பலம் ஆகி வருகின்றன. உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில் பட்டுக்கோட்டை மாணவர் தற்கொலைக்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும்.
இனியும் அலட்சியப்படுத்தாமல் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: நீட் தேர்வில் தோற்றதால் மாணவர் தற்கொலை: மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்- நீட் விலக்கு அளிக்க வேண்டும்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சிலம்ப வேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர், தொடர்ந்து இரண்டாவது முறையாக நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே கடந்த 8 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும், மருத்துவப் படிப்பில் சேர முடியாத மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வழக்கமான ஒன்றாகி வருகிறது. முழுக்க முழுக்க வணிக நோக்கம் கொண்ட நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசும், ஆட்சிக்கு வந்த முதல் கையெழுத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த பிறகும் நீட் தேர்வுக்கு விலக்கு பெறாத திமுக அரசும் தான் மாணவனின் தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும்.

நீட் தேர்வு எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கம் கடந்த 8 ஆண்டுகளில் நிறைவேறாத நிலையில், அந்தத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் அல்லது தமிழ்நாட்டிற்கு மட்டுமாவது விலக்கு அளிக்க வேண்டும். நீட் விலக்கு பெற்றே தீருவோம் என்று கூறி மக்களை தொடர்ந்து முட்டாள்களாக்கி வரும் திமுக அரசு, இனியாவது நீட் விலக்கு பெறுவதற்கான உண்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவை அனைத்துக்கும் மேலாக மாணவர்கள் விழிப்புடனும், தன்னம்பிக்கையுடனும் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். நீட் தேர்வில் தோற்றால் வாழ்க்கையை இழந்து விட்டதாக அர்த்தம் இல்லை. உயர்கல்வியில் எத்தனையோ வாய்ப்புகள் இருக்கும் நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததற்காக தற்கொலை செய்து கொள்ளும் மன நிலையில் இருந்து மாணவர்கள் விடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். (குறிப்பு: உதவிக்கு அழைக்கவும் 104 or 044 2464 0050)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+