தஞ்சை அரசு பள்ளி ஆசிரியை செய்த சின்ன தவறு.. 60 பவுன் தங்க நகைகள் மாயம்.. பத்திரம் எடுத்த போது மர்மம்
தஞ்சாவூர்: தஞ்சை பள்ளியக்கிரஹாரம் மெயின் சாலை பகுதியில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன் என்பவருடைய மனைவி சர்மிளா தஞ்சையில் அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் இருந்த 60 பவுன் நகைகள் மாயமானது. இது தொடர்பாக போலீசார் விசாரணை தீவிரமாக நடத்தி வருகிறார்கள்.
தஞ்சை பள்ளியக்கிரஹாரம் மெயின் சாலை பகுதியில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன் என்பவர், பெங்களூருவில் உள்ள ஒரு பிரபல ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சர்மிளா. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.

அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியை சர்மிளா, கடந்த ஏப்ரல் 1-ந் தேதி உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் சர்மிளா தனது வீட்டுக்கு வந்தார். பின்னர் தான் அணிந்து இருந்த நகைகளை கழற்றி ஒரு பையில் வைத்து பீரோவில் வைத்துள்ளார். அதே பீரோவில் உறவினர் ஒருவருடைய நிலத்தின் மூலப்பத்திரத்தையும் சர்மிளா வைத்துள்ளாராம். கடந்த ஏப்ரல் 2-ந்தேதி சர்மிளாவின் வீட்டுக்கு வந்த உறவினர் தனது நிலப்பத்திரத்தை எடுத்து தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சர்மிளா தன்னுடன் பணியாற்றும் பணியாளர் ஒருவரை அனுப்பி உள்ளார். அங்கு வீட்டு அருகில் கடை வைத்திருக்கும் முதியவரிடம் சாவியை வாங்கி வீட்டை திறந்து, பத்திரத்தை எடுத்துக்கொடுத்து விடுமாறு கூறி உள்ளார். அதன்படி சாவியை வாங்கி வீட்டை திறந்து பத்திரத்தை அவர் எடுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகு வீட்டுக்கு வந்த சர்மிளா பீரோவை திறந்து நகைகளை சரிபார்க்கவில்லை. நேற்று முன்தினம் ஊருக்கு வந்த பாலசுப்பிரமணியன் நகைகளை அடகு வைக்க பீரோவில் இருந்த நகைகளை தேடியபோது 60 பவுன் தங்க நகைகளும் காணாமல் போனது தெரிய வந்தது.இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
நகைகள் மாயமானது தொடர்பாக பாலசுப்பிரமணியன் தனது மனைவியிடம் கேட்டபோது கடந்த 2-ந் தேதி பத்திரத்தை எடுத்துச்சென்ற தகவலை கூறியுள்ளார். இதையடுத்து தஞ்சை மேற்கு போலீசில் பாலசுப்பிரமணியன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நகைகள் எப்படி மாயமானது? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். உதவி தலைமை ஆசிரியை வீட்டின் பீரோவில் இருந்த 60 பவுன் நகைகள் மாயமான சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications