தஞ்சை பெரிய கோயிலுக்கு போறீங்களா? இனி இதுதான் 'டிரஸ் கோட்..' வெளியான முக்கிய அறிவிப்பு
தஞ்சாவூர்: உலகின் மிகவும் பிரசித்திபெற்ற தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த ஆடை கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் ஆடை கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. கோயில்களின் மான்பை பாதுகாக்கும் வகையில் இந்த ஆடை கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கோயில்களிலும் ஒவ்வொரு மாதிரியான ஆடை கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. தென் தமிழகத்தின் கன்னியாகுமரியில் உள்ள சுசிந்திரம் கோயிலில் ஆண்கள் மேல் சட்டை அணியக்கூடாது என்பது விதி. எனவே ஆண்கள் மேல் சட்டை அணியாமல் சுவாமி தரிசனம் செய்வார்கள்.

இதே மற்ற கோயில்களில் ஆண்கள் லுங்கி, டீசர்ட் அணிந்து வந்தால் அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்கு மாறாக பேண்ட், வேட்டி, சட்டை போன்றவை அணிந்து வந்தால் மட்டுமே அணுமதி வழங்கப்படுகிறது. இந்த ஆடை கட்டுப்பாடுகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நீதிமன்றங்களை பல்வேறு தரப்பினர் இதற்கு முன்னர் அணுகி இருந்திருக்கின்றனர்.
அதாவது, வெளிநாட்டு பயணிகள், வெளிமாநில சுற்றுலா பயணிகள் கோயிலுக்கு வரும் போது அவர்களுக்கு இதுபோன்ற ஆடை கட்டுப்பாடு இருப்பது தெரிவது கிடையாது. ஜீன்ஸ் டீசர்ட் உடையில் வரும் இந்த பயணிகளால் ஆடை கட்டுப்பாடு இருக்கும் கோயிலுக்கு சென்று தரிசிக்க முடிவதில்லை என்று சொல்லப்பட்டது. மட்டுமல்லாது மான்பை குலைக்கும் ஆடைகள், மான்பை குலைக்காத ஆடைகள் என இப்படி பிரிப்பதே தவறு என்றும் குறிப்பிட்ட தரப்பினர் கூறி வருகின்றனர்.
மறுபுறம், காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகளை மாற்ற கூடாது எனவும், சக பக்தர்கள் முகம் சுழிக்கும் வகையில் ஆடை அணிந்து கோயிலுக்குள் வருவது ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர். இப்படியாக இந்த விவாதங்கள் நீடித்து வருகிறது. இதற்கிடையில் கோயில்களில் அவ்வப்போது ஆடை கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது தஞ்சை பெரிய கோயிலிலும் ஆடை கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதில்,"ஆண்கள் வேட்டி, சட்டை பேண்ட் அணிந்தும், பெண்கள் புடவை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் ஆகியவை அணிந்து வர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு பலகை காலணி பாதுகாக்கும் இடம் மற்றும் நுழைவு வாயில் என இரண்டு இடங்களில் வைக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications