பேருந்துக்காக காத்திருந்த பெண்.. லிப்ட் கொடுத்து.. பாலியல் வன்கொடுமை.. தஞ்சையில் திக் திக் சம்பவம்
தஞ்சாவூர்: இரவு நேரத்தில் பேருந்துக்காக நீண்ட நேரமாக காந்திருந்த பெண்ணிடம் லிப்ட் தருவதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இரண்டு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் தஞ்சையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் நாளுக்கு நாள் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல் ஓங்கு ஒலித்து வருகின்றன.

மகாராஷ்டிர மாநிலத்தில் 4 வயதுள்ள இரண்டு சிறுமிகளுக்குப் பள்ளியில் பாதுகாவலரால் பாலியல் தொல்லை, கேரளத்தில் நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர், உத்தரப்பிரதேச மருத்துவமனையில் செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர், கேரளத்தில் மூதாட்டியை பலாத்காரம் செய்த இளைஞர் என நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமை பிரச்னை நிகழ்கின்றன.
வீடு, பள்ளி, மருத்துவமனை, கல்லூரி என எந்தப் பகுதிகளும் பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக மாறிவிட்டன. நாட்டில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் இரவுப் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் லிப்ட் தருவதுபோல் கூட்டிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து இளைஞர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகே 45 வயது மதிப்பிலான திருமணமான பெண் ஒருவர் செப்டம்பர் 3 ஆம் தேதி இரவு நேரப் பேருந்துக்காக காத்திருந்துள்ளார். நீண்டநேரமாகியும் பேருந்து எதுவும் வராமல் இருந்துள்ளது. இந்நிலையில், அந்த வழியாக ராயந்துாரைச் சேர்ந்த பிரவீன் (32), ராஜ்கபூர் (25) ஆகிய இரண்டு பேரும், இரண்டு இருசக்கர வாகனங்களில் அப்பகுதியில் வந்துள்ளனர்.
பின்னர், பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் பேருந்து வருவதற்கு நீண்ட நேரமாகும். நாங்கள் அந்தப் பகுதியைத்தான் தாண்டி செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை நம்பிய அப்பெண் தன்னை குறிப்பிட்ட பகுதியில் இறக்கிவிட முடியுமா என்று லிப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து, பீரவீன் தனது இருசக்கர வாகனத்தில் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு சென்றார். அவர்களைப் பின்தொடர்ந்து ராஜ்கபூரூம் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இந்நிலையில், ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பிரவீன் வாகனத்தை நிறுத்தியுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பெண்ணின் வாயைப் பொத்தி பிரவீனும், ராஜ்கபூரும் அருகில் இருந்த வயல் பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளனர். அச்சமடைந்த அந்தப் பெண் அவர்களிடமிருந்து தப்பிக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
இதைத்தொடர்ந்து, ராஜ்கபூரும், பிரவீனும் அப்பெண்ணை பலமாகத் தாக்கியுள்ளனர். இதில் நிலை குலைந்துபோன பெண்ணை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அம்மாவின் வருகைக்காக காத்திருந்த அவரது மகள் மற்றும் மகன் நீண்ட நேரமாகியும் அம்மா வராததால் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து, பயந்துபோன அவரது மகள் தம்பியிடம் அம்மா எங்கே என்று பார்த்து வரச் சொல்லியுள்ளார்.
இதையடுத்து, அப்பெண்ணை தேடிச் சென்ற நிலையில் தன் அம்மா சாலையோரத்தில் அழுதுகொண்டு நின்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது, பிரவீன், ராஜ்கபூர் இருவரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். ஏன் அம்மா அழறீங்க, என்னாச்சு என்று கேட்ட மகனிடம் கதறி அழுதுள்ளார் அந்த தாய். இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தன் மகளிடம் அந்தப் பெண் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட அந்த பெண் பூதலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்னர். தொடர்ந்து, பிரவீன், ராஜ்கபூர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications