அதிமுக தவெக கூட்டணிக்கு வாய்ப்பா? விஜய்யின் அரசியல் வாழ்வு முடிந்து விடும்.. புகழேந்தி பேட்டி
தஞ்சாவூர்: கடும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள் நடத்துகின்ற கட்சியுடன் விஜய் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டார். எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக் கொண்டேன் என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறவில்லை. எடப்பாடி பழனிச்சாமியுடன் சேர்ந்தால் தவெக தலைவர் விஜய் காணாமல் போய்விடுவார். எடப்பாடி பழனிசாமியுடன் விஜய் சேருவார் என கனவில் கூட நினைக்க வேண்டாம் என
தஞ்சையில் புகழேந்தி பேட்டி அளித்தார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி நேற்று தஞ்சை வந்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாகரீகம் இல்லாமல் பழனிசாமி அழுத்தம் தரவில்லை அழுத்தம் தரவில்லை என்று கூச்சல் இடுவதும், ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் இதனை வேடிக்கை பார்ப்பதும் வினோதமாக இருக்கிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் சபாநாயகர் அப்பாவு அவர்களும் பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் ஆக எதிரில் அமர்ந்திருந்தால் போதும், எப்படி வேண்டுமானாலும் கத்தலாம் இந்த முட்டாள் என்கின்ற வரை தான் ஆட்சி நீடிக்கும் என நினைத்துக் கொண்டு இப்படி கூச்சலிட அனுமதித்து வேடிக்கை பார்க்கிறார்கள்.
மத்திய அரசிடம் அழுத்தம் தரவில்லை என்கிற பழனிசாமி பஞ்சாப் விவசாயிகள் வருட கணக்கில் புதுடெல்லி நுழைவாயில் போராட்டம் நடத்தி பலர் உயிர் இழந்த போது இவர் என்ன செய்து கொண்டு இருந்தார். தமிழக முதலமைச்சராக இருந்து விவசாயிகளுக்காக என்ன அழுத்தம் கொடுத்தார். விளைகின்ற பயிர்களுக்கு சரியான விலையை நிர்ணயம் செய்ய போராடிய போது விவசாயிகள் செத்து மடிந்த பொழுது வேடிக்கை பார்த்தவர் தான் பழனிசாமி.
அண்ணா திமுக தொண்டனை தவெக கொடி பிடித்துக் கொண்டு அதை காண்பிக்க சொல்லி, அது அண்ணா திமுக கூட்டணி பிள்ளையார் சுழி போட்டு ஆகிவிட்டது என்று பைத்தியக்காரத்தனமாக உலகிலேயே நாம் பார்க்க முடிந்தது. தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று தெரிந்தவுடன் விஜய் காலையும் பிடிக்க பழனிசாமி அழைக்கிறார் . ஆனால் விஜய் அவர்களோ வெளியிலே வருவதும் இல்லை. இவர்களைப் பற்றி பேசுவதும் இல்லை. இதுவரை பழனிசாமி பற்றி எதுவும் கூறவும் இல்லை.
தஞ்சையில் ஒரு முக்கியமான விஷயத்தை உங்கள் முன்னால் சொல்கிறேன்.. சிலர் எப்படியாவது விஜய்யிடம் சேர்ந்து விடலாம் என்று பழனிசாமி போலவே துடிக்கிறார்கள் .. எனக்கு கிடைத்த நம்பிக்கையான தகவலின் அடிப்படையில் கிரிமினல் பேர்வழிகளை குற்றவியல் வழக்குகளில் ஈடுபட்டு சிறையில் இருந்தவர்களை அவர்கள் நடத்தும் கட்சியை கூட்டணிக்கு சேர்த்துக் கொள்வதற்கு விஜய் தயாராக இல்லை.. இதுதான் உண்மையான நிலவரம்.
இது தெரியாமலே தினமும் செய்தியாளர்களை சந்திக்கின்ற சிலர், விஜய்யிடம் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று கனவு காணுகிறார்கள். அவர்கள் பேட்டி அளிக்கும் போது எடப்பாடி பழனிசாமி மாற்றினால் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர தயார் என்கிறார். அப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்வதை தான் விரும்புகிறார்.. இது என்ன அரசியல் கொள்கை கோட்பாடு என்பது புரியவில்லை.
விஜய் அவர்களைப் பொறுத்தவரை கரூர் செல்ல வேண்டும் அங்கிருந்து போன 41 குடும்பங்களையும் நேரில் சென்று காண வேண்டும். ஆறுதல் கூற வேண்டும் அனுமதிக்காக காத்திருக்க கூடாது. காவல்துறை கைது செய்தால் வழக்கை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். தஞ்சை மண்டலத்தில் கஜா புயலின் பொழுது தென்னை மரங்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். எனது தலைமையில் ஓசூரில் இருந்து மூன்று பெரிய டிரக்குகளை அனுப்பி கொடுத்தேன். அதிலிருந்து பொருட்களை பார்த்து மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டினார்
பல பகுதிகளில் இருந்து தமிழகத்தில் வெளி மாநிலங்களில் இருந்தும் உதவினார்கள். ஆனால் தஞ்சை மண்டலத்திற்கு அன்றைய முதல்வர் பழனிசாமி திரும்பி கூட பார்க்கவில்லை, சமீபத்தில் தஞ்சை மண்டலத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முன்வந்து உதவ வேண்டும். ஏற்பட்ட நஷ்டத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். உதயகுமார் தினகரனை கேவலமாக பேசியதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. உதயகுமார் கேவலமாக தோற்றுப் போய் விடுவார். அதே நிலை தான் தஞ்சை மண்டலத்திலும் எனது நண்பர்கள் ஓ எஸ் மணியனுக்கும்.. முன்னாள் அமைச்சர் காமராஜர் புதுக்கோட்டை விஜயபாஸ்கர் இவர்களுக்கும் ஏற்படும்.. டெபாசிட் தக்க வைத்துக்கொள்ள இவர்கள் படாத பாடுபட வேண்டி இருக்கும்
எடப்பாடி பழனிசாமி தலைமையே தொடர்ந்தால் இந்த நிலை தான் நீடிக்கும். எனக்கு கிடைத்த தகவலின் படி பழனிசாமி அருகில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் தேர்தலில் போட்டியிட தயாராக இல்லை.. இவர்கள் வேட்பாளர்களை தேடி அலைவார்கள் குறிப்பாக பழனிச்சாமி புதிய வேட்பாளர்களை தேடி அலைவார்.. சொந்த கட்சி பிரச்சனை தீர்க்க முடியாத பழனிசாமி எப்படி ஊர் பிரச்சனையை தீர்க்க முடியும். கூட்டணி சேர்ந்தால் என்ன நடக்கும் என்று கேட்கிறீர்கள்.. அப்படி கூட்டணி பழனிசாமியுடன் அமைந்தால் விஜய்யின் அரசியல் வாழ்வு முடிந்து விடும்.
ஒருகால் வெற்றி பெற்றால் விஜய் முதலமைச்சராக வருவார். எடப்பாடி பழனிசாமி விளையாட்டு துறை அமைச்சர் தான் ஆக முடியும். நான் எனது அரசியல் வரலாற்றில் ஜெயலலிதா வழியில் பல போராட்டங்களை சந்தித்தவன். கன்னடா தமிழ் பிரச்சனையில் வந்த பொழுது எனது வீடு அடித்து நொறுக்கப்பட்டது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா நேரடியாக எஸ்எம் கிருஷ்ணாவிடம் பேசினார்கள். இரண்டு மூன்று முறை என் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. பொதுவாழ்வில் இதற்கு எல்லாம் கவலைப்படுவதே இல்லை. ஆகவே நடிகர் விஜய் அவர்கள் வளர்ந்து வருகிறார்கள் நல்ல தலைவர்கள் அவரோடு வேண்டும். எதற்கும் கவலைப்பட தேவையில்லை தைரியமான அரசியலை மேற்கொள்ள வேண்டும்" இவ்வாறு புகழேந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications