Exclusive: ''புகழேந்தி பணத்தை எடுத்துட்டு ஓடிடுவாரு...'' அமமுக ரெங்கசாமி பாய்ச்சல்
தஞ்சை: தேர்தல் செலவுக்கு தன்னிடம் பணம் தரவில்லை என்ற கோபத்தில் தான் டிடிவி தினகரன் பற்றி பெங்களூரு புகழேந்தி வாய்க்கு வந்ததை பேசுவதாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் ரெங்கசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு புகழேந்தி விரைவில் அதிமுகவில் இணைய உள்ள நிலையில் அமமுகவிலிருந்து பல நிர்வாகிகளை தன்னுடன் அழைத்துச்செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தஞ்சாவூர் ரெங்கசாமியிடம் ஒன் இந்தியா தமிழ் சார்பாக தொடர்பு கொண்ட போது அவர் கூறியதாவது;

விசுவாசம் இல்லை
பெங்களூரு புகழேந்தியை பொறுத்தவரை ஒசூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட தனக்கு தேர்தல் செலவுக்காக பெரும் தொகையை எதிர்பார்த்தார். அதை டிடிவி தினகரன் கொடுக்கவில்லை என்பதால் அதற்கு காரணம் பழனியப்பன் என நினைத்து அவர் மீது முதலில் கோபத்தை வெளிப்படுத்தினார். பிறகு தலைமைக்கு உரிய விசுவாசம் இல்லாமல் சில உள்ளடி வேலைகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

பணம் தரவில்லை
அவரிடம் தேர்தல் செலவுக்கு அமமுக தலைமை பணத்தை கொடுத்திருந்தால் நிச்சயம் அவர் செலவு செய்திருக்க மாட்டார், அதை எடுத்துக்கொண்டு ஓடியிருப்பார். அது தெரிந்த காரணத்தால் தான் அவருக்கு பணம் கொடுக்கப்படவில்லை. இதனை தாங்கிக்கொள்ள முடியாத புகழேந்தி அப்போதே வெளியேற வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

குழப்பம்
உள்ளாட்சித் தேர்தல் செலவுக்கு டிடிவியிடம் இருந்து பணத்தை வாங்கிய பின்பு அமமுகவில் ஒரு நிர்வாகி கூட இருக்கமாட்டார் என இன்று இவர் எங்களை பார்த்து சொல்வது வேடிக்கையாக உள்ளது. புகழேந்தி ஆளுங்கட்சி உதவியுடன் இன்று குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

காரணம் தெரியவில்லை
சசிகலா குடும்பத்தினருக்கு மிக நெருங்கிய நபரான சிவ.ராஜமாணிக்கம் அதிமுகவில் இணைந்தது பற்றி நாம் கேட்டதற்கு, அது தான் சார் ஏன் எனத் தெரியவில்லை. அவருக்கு நல்ல மதிப்பும், மரியாதையும் டிடிவி கொடுத்து வைத்திருந்தார். டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நானும், அவரும் இணைந்து சென்று கட்சி பணியாற்றியிருக்கிறோம். சரி அது அவரது தனிப்பட்ட முடிவு.
மேற்கண்டவாறு அமமுக துணைப் பொதுச்செயலாளர் ரெங்கசாமி விவரித்தார்.












Click it and Unblock the Notifications