தஞ்சாவூர் ஆசிரியை படுகொலை சம்பவம்.. நிதியுதவியை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பட்டப்பகலில் அரசுப் பள்ளிக்குள் நுழைந்து இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதில் ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ஆசிரியையின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் முக ஸ்டாலின் நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மல்லிபட்டினம் எனும் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக டிரெயினிங் டீச்சராக ரமணி (26) என்பவர் பணியாற்றி வந்தார். தமிழ் ஆசிரியையான இவர் பள்ளியின் ஓய்வறையில் இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் ரமணி ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த இளைஞர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியை ரமணியை குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் ரமணி சரிந்து விழுந்தார். உடனடியாக சக ஆசிரியர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ஆசிரியை ரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக மதன் குமார் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், இளைஞர் மதன் குமார், ஆசிரியை ரமணியை காதலித்துள்ளார். இந்தப் பிரச்சனையில் தான் அவர் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்துக்கு நிவாரண உதவியை முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்திக் குறிப்பை ஒன்றையும் முதல்வர் வெளியிட்டுள்ளார்.
அதில், தஞ்சாவூர் மாவட்டம். பட்டுக்கோட்டை வட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்த ரமணி (வயது 26), இன்று காலை பள்ளி வளாகத்தில் இருந்தபோது மதன்குமார் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியைக்கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக உயர்கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்களை உயிரிழந்த ஆசிரியை அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க அனுப்பிவைத்தேன். பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ள இச்சம்பவமானது மிகவும் மிருகத்தனமானது, இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குற்றவாளிக்கு விரைவில் சட்டப்படி தண்டனை பெற்றுத் தரப்படும். கிராமப்புறப் பகுதியில் கல்விப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட செல்வி ரமணி அவர்களின் உயிரிழப்பு பள்ளிக் கல்வித் துறைக்கும். சக ஆசிரியர்களுக்கும். மாணவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
ரமணி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, ரமணி அவர்களின் குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications