பாஜக ஒரு விஷ பாம்பு! தமிழ்நாட்டில் நுழைய முயல்கிறது.. அப்போ அதிமுக? குட்டி கதை சொன்ன உதயநிதி
தஞ்சாவூர்: தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, பாஜக மற்றும் அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
தஞ்சை மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர்கள் கூட்டம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திலகர் திடலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குத் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தலைமை தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திமுக அமைச்சர் உதயநிதி பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
உதயநிதி: இந்தக் கூட்டத்தில் பேசிய உதயநிதி, "கடந்த 7 வருடத்தில் மட்டும் நாம் நீட் தேர்வு காரணமாக 21 மாணவ செல்வங்களை இழந்துள்ளோம். நீட் தேர்வை ரத்து செய்யத் தமிழ்நாடு அரசு முழு முயற்சியை எடுத்து வருகிறது. கடந்த 2021இல் திமுக தனது வாக்குறுதியில் நீட் தேர்வை உடனடியாக ஒழிப்போம் எனக் கூறியிருந்தோம்.. அது உண்மைதான்.. இதற்கான முயற்சிகளைத் தமிழ்நாடு முதல்வர் எடுத்து வருகிறார். ஒரு முறை இல்லை இரண்டு முறை இது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினோம்.
அதன் பின்னரே குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அது சென்றுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். ஆனால், அதிமுக என்ன செய்கிறது. சொல்லப்போனால் அதிமுக தான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், போராட்டத்தையும் இப்போது திமுக தான் நடத்துகிறது. முதல்வரிடம் அனுமதி வாங்கி விரைவில் அடுத்த கட்ட போராட்டமும் நடத்தப்படும்.

நீட்: நீட் தேர்வை ரத்து செய்யும் வரையில் திமுக இளைஞரணி ஓயாது. நானும் ஓய மாட்டேன். நாங்கள் நடத்திய போராட்டத்தில் அதிமுகவும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதிமுகவுக்கும் அழைப்பு விடுத்தோம். ஆனால், அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அதேநாளில் மதுரையில் அவர்கள் மாநாட்டை நடத்தினார்கள். அந்த மாநாட்டில் கூட நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற உத்தரவாதத்தை பாஜக கொடுத்தால் மட்டுமே கூட்டணி என்று ஒரு தீர்மானத்தைக் கூட பாஜகவால் கொண்டு வர முடியவில்லை.
நான் இங்கே உங்களுக்கு ஒரு குட்டி கதை சொல்ல விரும்புகிறேன்.. நாம் வீட்டில் இருக்கிறோம். அந்த வீட்டை நாம் சுத்தமாக வைத்துள்ளோம்.. ஆனால், வீட்டில் அடிக்கடி விஷப் பாம்பு ஒன்று உள்ளே வருகிறது. பல முறை விரட்டி அடித்தாலும் கூட அந்த பாம்பு மீண்டும் மீண்டும் வருகிறது. இதற்கான காரணத்தை ஆராய்ந்த போதுதான்.. குப்பை என்ற புதரில் ஒளிந்து கொண்ட அந்த விஷ பாம்பு நமது வீட்டிற்கு வருவது தெரிகிறது.

விஷ பாம்பு: இதனை நீங்கள் தற்போதுள்ள அரசியலுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இதில் வீடு என்பது தமிழ்நாடு. இதை நாம் எப்போதும் சுத்தமாகவே வைத்துள்ளோம். இதில் உள்ளே வர முயலும் விஷப் பாம்பு தான் பாசிச பாஜக.. அதிமுக என்ற புதரில் ஒளிந்து கொண்டு தான் அந்த விஷப் பாம்பு தமிழ்நாடு என்ற வீட்டில் நுழையப் பார்க்கிறது. அந்த விஷ பாம்பைத் தடுக்க வேண்டும் என்றால் முதலில் குப்பை புதரை நாம் சுத்தம் செய்ய வேண்டும்.
அதுபோல அதிமுக என்ற கட்சியை ஒழித்தால் தான் அத்துடன் சேர்ந்து பாஜகவை ஒழிக்க வேண்டும்.. கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் நாம் இங்கே இருந்த அடிமைகளைத் துரத்தி அடித்தோம்.. அதேபோல அடுத்து வரும் 2024 இல் அடிமைகளையும், அவர்களது எஜமானர்களையும் துரத்த வேண்டும்.. அப்போது தான் தமிழ்நாட்டைக் காக்க முடியும்" என்றார்.












Click it and Unblock the Notifications