திடீருன்னு திமுகவிற்கு தாவுறாங்க.. கட்சித் தாவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கனும்! கொந்தளிக்கும் பாஜக
தஞ்சாவூர்: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சிமாறியவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவின் பொதுச் செயலாளர் சீனிவாசன் கூறினார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ல் நடந்தது. பிப்ரவரி 22ல் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மார்ச் 2ல் பதவியேற்றனர். இன்று மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் தேர்வு நடந்தது.
இதற்கிடையே தஞ்சாவூரில் நேற்று பாஜக பொதுச்செயலாளர் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஜனநாயகத்துக்கு எதிரானது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக கணிசமான இடங்களை பெற்றுள்ளது. திமுக எப்படி வெற்றி பெற்றது என்ற ரகசியம் அனைவருக்கும் தெரியும். அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எதிர்க்கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்களை திமுகவினர் விலைக்கு வாங்கியுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. சிலர் கட்சி தாவியுள்ளனர்.

கட்சித்தாவல் தடை சட்டம்
ஒரு கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னர் திமுகவுக்கு மாறிய வேட்பாளர்கள் செயல் மன்னிக்க முடியாதது. சட்டமன்றம், பாராளுமன்றம் தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் வேறு கட்சிக்கு ஆதரவு கொடுக்க முடியாது. அதேப்போல் உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற்ற கட்சி வேட்பாளர்கள் வேறு கட்சிக்கு ஆதரவளிப்பதை தடுக்க கட்சி தாவல் தடைச் சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமையும்போது கண்டிப்பாக கட்சி தாவல் தடை சட்டம் கொண்டு வரப்படும்.

தோல்வி ஏன்
நகர்ப்புற தேர்தலில் வெற்றிபெற்ற பாஜகவை சேர்ந்த கவுன்சிலர்கள் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பார்கள். திமுகவின் ஊழலை தடுத்து மக்களின் வரிப்பணத்தை காப்பாற்றுவார்கள். சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தபோது பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் தோல்வி அடைந்தோம் என கூறினர். தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்த போது பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்ததால் தான் தோல்வி அடைந்தோம் என கூறி வருகின்றனர். இப்படி மாறி மாறி அவர்கள் பேசுகின்றனர்.

கருத்து கூற முடியாது
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தற்போது அக்கட்சியில் பேச்சு எழுந்து வருவதை பற்றி நான் கருத்து கூற முடியாது. அது அவர்களின் உள்கட்சி விவகாரம். ஒரே நாடு , ஒரே தேர்தல் திட்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி வரும் பட்சத்தில் 2024 பாராளுமன்றத் தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும். இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டால் மக்களுக்கான நலத் திட்ட உதவிகளை தொடர்ந்து தங்குதடையின்றி செய்ய முடியும். ஏன் என்றால் எப்போதும் ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்து கொண்டே உள்ளது. அப்படி இருக்கும்போது நலத்திட்ட உதவிகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல்
இதனை தடுக்கத்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்கிறது. மேலும் இதன் மூலம் தேர்தல் செலவினங்களும் கணிசமாக குறையும். உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டு சிறப்பு விமானம் மூலம் மத்திய அரசு தாயகம் அழைத்து வருகிறது. போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீட் தேர்வு இல்லையென்றால் மாணவர்கள் வெளிநாட்டுக்கு படிக்க செல்லும் நிலை ஏற்படாது என கர்நாடக முன்னாள் குமாரசாமி தெரிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம். அவர் பேசுவது சரியல்ல'' என்றார்.












Click it and Unblock the Notifications