கும்பகோணம் +2 மாணவன் பலியான விவகாரம் கொலை வழக்காக மாற்றம்.. தாக்கிய 15 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பிளஸ் 1 மாணவர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 12 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த நிலையில், போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 15 மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தப் பள்ளியில் படிக்கும் 11ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி இந்த பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் மற்றும் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், 11 ஆம் வகுப்பு மாணவருக்கு மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அந்த மாணவரின் பெற்றோர், மாணவரை கும்பகோணம் அரசு தலைமை மருத்துமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார். இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தாக்குதல் நடத்திய மாணவரும் மைனர் என்பதால் இருவரது பெற்றோரையும் வரவழைத்து சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மாணவர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி மீண்டும் 2 மாணவர்களுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து டிசம்பர் 4 வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்தவுடன் 10க்கும் மேற்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயில் தெற்கு கோபுர வாசல் அருகே காத்திருந்தனர். அப்போது சிறப்பு வகுப்பு முடிந்து 12 ஆம் வகுப்பு மாணவர் கோயில் அருகே வந்தபோது அங்கு மறைந்திருந்த 11 ஆம் வகுப்பு மாணவர்கள், கட்டையால் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில், பிளஸ் 2 மாணவர் பலத்த காயமடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பெற்றோர் மாணவரை மீட்டு அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரை தாக்கிய 15 பதினொன்றாம் வகுப்பு மாணவர்களை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். இதனையடுத்து, தஞ்சாவூரில் உள்ள இளஞ்சிறார் நீதிகுழும நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை கூர்நோக்கு மையத்தில் சேர்த்தனர்.
மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அந்த மாணவர் கடந்த சனிக்கிழமையன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த பிளஸ் 1 மாணவர்கள் 15 பேர் மீதும், கொலை, ஆபாசமாக திட்டுதல், பயங்கர ஆயுதம் கொண்டு தாக்குதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட BNS 103, 296 ( b), 118 (1), 351 (3), 190, 115 (1), 118 (1) ஏழு பிரிவுகளின் கீழ் பட்டீஸ்வரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications