அண்ணாமலை, தமிழிசை வரவேற்கிறார்கள்.. சீமான் யாரின் ஜெராக்ஸ் என்று புரிகிறதா.. அமைச்சர் கோவி.செழியன்!
தஞ்சாவூர்: பெரியார் மீதான விமர்சனத்தை பாஜகவின் அண்ணாமலையும், தமிழிசை செளந்தரராஜனும் வரவேற்கிறார்கள் என்றால், சீமான் யாருடைய ஜெராக்ஸ் காப்பியாக இருக்கிறார் என்பது புரிந்து கொள்ள முடிவதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர்களான அண்ணாவுக்கும், கருணாநிதிக்கும் இல்லாத அரசியல் தெளிவு சீமானுக்கு வந்துவிட்டதை போல் பேசுவதாகவும் விமர்சித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான பரப்புரை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாரை கடுமையாக விமர்சித்து வருகிறார். நேற்று கூட, பெரியாரை வேண்டுமென்றே சீமான் விமர்சிப்பதாக கூறுகிறார்கள். பெரியார் வேண்டாம் என்பதால் தான் தொடர்ந்து விமர்சிக்கிறேன் என்று கூறினார்.

அதுமட்டுமல்லாமல் இந்திய சுதந்தரப் போராட்டத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் உடன் ஒப்பிட்டு பெரியாரை விமர்சித்திருந்தார். ஊசிபோன வெங்காயம் என்றெல்லாம் பெரியாரை விமர்சிப்பது பெரியாரிய இயக்கங்கள் மத்தியில் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பெரியார் என்ற மாமணியை தொட்ட எதிரி யாரும் நிலைத்து நின்றதில்லை.
அவன் காற்றோடு காற்றாக பறந்துபோவான். என்றைக்கும் நின்று வெல்லுகிற கோட்டை, இது திராவிட கோட்டை. இது பெரியார் மண் தான். அரசியல் களத்தில் களம் பதித்து கொள்கை ரீதியாக நடக்க இயலாதவர்கள், போலி வேஷதாரிகள் நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என்று தாம் இருக்கிற இடத்தை தடம்பதித்து காட்டும் அரசியல் பேர்வழிகள் தான் இப்படி நாடகங்களை ஆடுகிறார்கள்.
நான் திராவிடன். பெரியார் என்ற மனிதர் இல்லையென்றால், நான் இல்லை என்று பேசிய சீமான் உண்டு. ஆனால் இன்று, கைகூலியாக மாறி பெரியாரின் கொள்கைக்கு எதிராக பேசி திரிவது எல்லாம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. மூத்த தலைவர்கள் பலரும் அவரை கண்டித்திருக்கிறார்கள். அதன் வழியில் சொல்ல வேண்டுமென்றால், அவரின் செயல் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்று.
எந்த ஆயுதத்தை எடுத்து விளையாடுகிறோம் என்று அறியாமல் விளையாடுகிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு உருவாக்கி தந்த பெருமை பெரியாருக்கு உண்டு. அண்ணாவுக்கும், கருணாநிதிக்கும் இல்லாத அரசியல் தெளிவு சீமானுக்கு வந்துவிட்டதை போல் பேசுகிறார். அதனை அண்ணாமலை, தமிழிசையும் வரவேற்கிறார்கள் என்றால், யார் ஜெராக்ஸ் காப்பி சீமான் என்பது பேச்சில் இருந்து புரிகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரின் கட்சியையும், அவரின் பெயரையும் கூட சொல்லவில்லை என்று தெரிவித்தார். நேற்று பாஜகவின் ஏ டீம் திமுக என்று சீமான் விமர்சித்திருந்தார். தொடர்ந்து வேங்கைவயல் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையென்றாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசு தான். ஜனநாயக முறையில் செயல்படும் முதலமைச்சர், இந்த பிரச்சனையிலும் ஜனநாயக முறையில் நடப்பார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications