2024 மக்களவைத் தேர்தல்! காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்! -தமிமுன் அன்சாரி
தஞ்சாவூர்: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட தலைவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற மஜக செயற்குழுவில் காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் தனித் தீர்மானத்தையே நிறைவேற்றியுள்ளார் தமிமுன் அன்சாரி. மேலும், அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம் வருமாறு;

காங்கிரஸ் கூட்டணி
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், தேசத்தின் எதிர்கால நலன் கருதி காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் ஒரணியில் திரள வேண்டும் என இச்செயற்குழு ஜனநாயக சக்திகளை கேட்டுக்கொள்கிறது.ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடக்கூடிய EVKS இளங்கோவன் வெற்றிக்கு உறுதியாக பாடுபடுவது என்றும் தீர்மானிக்கிறோம்.

ஆயுள் சிறைவாசிகள்
தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளைக் கடந்து வாடும் நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை, பொது மன்னிப்பின் கீழ் தமிழக அரசு சாதி, மத, வழக்கு பேதமின்றி விடுதலை செய்ய வேண்டும். நீதியரசர் சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்றும், சமவாய்ப்பு ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்.

தாலிக்கு தங்கம்
தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தை மீண்டும் செயல்படுத்திட வேண்டும் என்று பெண்கள் தரப்பில் எழும் கோரிக்கையை தமிழக அரசு கவனத்தில் கொண்டு, அதை பரிசீலிக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. டெல்டா மாவட்டங்களில் பிப்ரவரியில் பருவம் தப்பி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு ஹெக்டருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு இச்செயற்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. அதே நேரம் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று இழப்பீட்டை அதிகப்படுத்தி தரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

அதானி நிறுவனம்
அதானி நிறுவனத்தின் மோசடிகள் குறித்து விவாதிக்க, ஒன்றிய அரசு ஒரு உயர்மட்ட விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.தஞ்சாவூரில் உள்நாட்டு பயணிகள் பயனடையும் வகையில் புதிய விமான நிலையம் ஒன்றை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.












Click it and Unblock the Notifications