மொத்தம் 6,131 பேர்.. ரூ.410 கோடி மோசடி.. ராஹத் பஸ் நிறுவன அதிபரின் மனைவி-மகன் அதிரடியாக கைது
தஞ்சாவூர்: மொத்தம் 6,131 பேரிடம் சுமார் ரூ.410 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் ராஹத் பஸ் நிறுவன அதிபரின் மனைவி மற்றும் மகனை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன் என்பவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் வரும் லாபத்தில் பங்கு தருவதாக கூறியிருக்கிறார். இதை நம்பி கோடிக்கணக்கான ரூபாயை ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்தனர். கடந்த 2020-ம் ஆண்டு வரை முதலீட்டாளர்களுக்கு முறையாக பணம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு கமாலுதீன் இறந்த பிறகு அவரது மனைவி ரஹானா பேகம், கமாலுதீன் சகோதரர் அப்துல் கனி ஆகியோரிடம் முதலீட்டாளர்கள் பணத்தை கேட்டிருக்கிறார். ஆனால் அவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்திருக்கிறார்கள். இதையடுத்து போலீசார் கமாலுதீன் சகோதரர் அப்துல் கனி, கமாலுதீன் மனைவி ரஹானா பேகம், மேலாளர் நாராயணசாமி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளார்கள். பின்னர் வழக்கு திருச்சி மாவட்ட பொருளாதார குற்ற தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. சுமார் 6,131 பேரிடம் ரூ.410 கோடி வரை மோசடி செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லி கிரேஸ் தலைமையிலான போலீசார், கமாலுதீனுக்கு உடந்தையாக இருந்தவர்கள் 4 பேர் மற்றும் கமாலுதீனின் சகோதரர் அப்துல்கனி ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கமாலுதீன் மனைவி ரஹானாபேகம்(வயது 48), மகன் அப்சல் ரகுமான்(25) ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்து விசாரித்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications