திருமணத்தை நிறுத்தியதால் ஆத்திரம்! பேஸ்புக்கில் பெண்ணின் படத்தை ஆபாசமாக பதிவிட்ட விசிக நிர்வாகி கைது
தஞ்சை: திருமணத்தை நிறுத்தியதால் ஆத்திரமடைந்து முகநூலில் பெண்ணின் படத்தை ஆபாசமாக பதிவிட்ட முன்னாள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் அறிவுடைநம்பி கைது செய்யப்பட்டார்.
தஞ்சை மாவட்டம், நாஞ்சிகோட்டை மறியல் பகுதியைச் சேர்ந்தவர் அறிவுடைநம்பி (41). இவர் தஞ்சை மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் தஞ்சை சட்டமன்ற தொகுதி செயலாராக இருந்து வந்துள்ளார்.
இவருக்கு முதல் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாகக் கூறி கடலூரை சேர்ந்த 28 வயதான பெண்ணுடன் கடந்த மார்ச் மாதம் திருமணம் நிச்சயம் செய்துள்ளார்.

திருமணம்
கடந்த மே மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அறிவுடையநம்பிக்கு வேறு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அறிந்த கடலூரை சேர்ந்த பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அறிவுடைநம்பி முகநூலில் கடலூர் பெண்ணுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.

முகத்தை மார்பிங்
போலியாக பெண்ணின் முகத்தை மட்டும் மாற்றி ஆபாசமான புகைப்படத்தை பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட கடலூரை சேர்ந்த பெண் கடந்த ஜூலை மாதம் போலீஸில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அறிவுடைநம்பியை தேடி வந்தனர்.

கொலை மிரட்டல்
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுடைநம்பியை கட்சியின் தஞ்சை தொகுதி செயலாளர் பொறுப்பு மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கினார். இதைத் தொடர்ந்து புகார் அளித்திருந்த கடலூரை சேர்ந்த பெண்ணுக்கு அறிவுடைநம்பி தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

சென்னையில் ஹோட்டல்
இரண்டு மாதங்களாக போலீஸாரிடம் சிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்ரியா உத்தரவின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ் மேற்பார்வையில் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் நேற்று முன் தினம் இரவு சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து அறிவுடைநம்பியை சுற்றி வளைத்து பிடித்தனர்.

குண்டர் சட்டம்
இதனையடுத்து நேற்று வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அறிவுடைநம்பியை போலீஸார் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து அறிவுடைநம்பி மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நேற்றிரவு சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
