தஞ்சாவூர்: 6 முறை வெற்றி கொடி பறக்கவிட்ட பழனிமாணிக்கத்தை ஓரம்கட்டிய 'தென்னங்குடி' முரசொலி யார்?
சென்னை: தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் 6 முறை வெற்றி பெற்ற திமுகவின் சீனியர்களில் ஒருவரான பழனிமாணிக்கத்துக்கு இம்முறை வாய்ப்பு தரப்படவில்லை. பழனிமாணிக்கத்தை ஓரம்கட்டிவிட்டு 46 வயதாகும் 'தென்னங்குடி' முரசொலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது திமுகவினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் திமுகவின் 21 வேட்பாளர்களை அக்கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். இதில் 10 சிட்டிங் எம்பிக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. 11 புதுமுகங்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். சிட்டிங் எம்பிக்களில் பழனிமாணிக்கத்துக்கு மீண்டும் தஞ்சாவூரில் வாய்ப்பு கிடைக்கும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால் இன்றைய வேட்பாளர்கள் பட்டியலில் பழனிமாணிக்கம் பெயர் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் முரசொலி பெயர் இடம் பெற்றிருந்துதான் இப்போது திமுகவில் பேசுபொருள். தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் 6 முறை போட்டியிட்டு வென்றவர் பழனிமாணிக்கம். அவருக்கு இந்த முறை சீட் மறுக்கப்பட்டது ஏன் என்பது தொடர்பாக திமுகவினரிடம் கேட்ட போது, தஞ்சாவூர் மாவட்டத்தில் பழனிமாணிக்கம் தவிர்க்க முடியாத சக்திதான். ஆனால் அவராலேயே தவிர்க்கவோ தடுக்கவோ முடியாத அளவுக்கு கோஷ்டி பூசல் படு உச்சகட்டத்தில் இருந்து வருகிறது. திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலின் போடும் உத்தரவுகளைக் கூட சில இடங்களில் பழனிமாணிக்கத்தில் வலது, இடதுகள் மதிக்காமல் தன்னிச்சையாகவே செயல்பட்டு வருவது குறித்தும் அறிவாலயத்துக்கு ஆதாரப்பூர்வமாகவே புகார்கள் பறந்தனவாம். குறிப்பாக உள்ளாட்சித் தேர்தலில் பழனிமாணிக்கத்தின் ஆதரவாளர்கள் ஆடிய ஆட்டம்தான் இப்போது லோக்சபா தேர்தலில் அவருக்கு சீட் இல்லை என திமுக தலைமை சொல்ல மிக முக்கியமான காரணம் என்கின்றனர்.
யார் இந்த முரசொலி?: 1978-ம் ஆண்டு பிறந்த முரசொலி, தஞ்சாவூர் மாவட்டம் தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். பிஎஸ்சி, பிஎல் பட்டப் படிப்புகள் படித்தவர். முரசொலியின் தாத்தா கந்தசாமி, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநராக இருந்தவர். இவரது தந்தை சண்முகசுந்தரம் தென்னங்குடி தொடக்க வேளாண்மை சங்கத் தலைவர், தென்னங்குடி ஊராட்சித் தலைவராகவும் பதவி வகித்தவர். 2006-11-ல் தஞ்சாவூர் திமுக ஒன்றிய குழு உறுப்பினராக இருந்தவர் முரசொலி. 2014-20-ல் திமுக பொதுக் குழு உறுப்பினர், 2020-ல் தஞ்சை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர், 2022-ல் தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் பதவி வகிப்பவர். திமுகவில் 3-வது தலைமுறையாக தொடரும் குடும்பத்தைச் சேர்ந்தவர் முரசொலி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications