ஆடுகள் பத்திரம்.. ஜெயம்மா நீயும் போயிட்டியா? தேனியில் தேம்பி தேம்பி அழுத பெரிய கருப்பன்.. என்னாச்சு?
தேனி: தேனி உட்பட ஒரே நாளில் பல இடங்களில் நடந்த ஆடுகள் திருட்டுக்கள், கால்நடை விவசாயிகளை கலக்கமடைய செய்து வருகிறது. இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காவல்துறையிடம் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக் கொண்டுவருகிறார்கள்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளுக்கு நாள் கால்நடைகள் திருட்டு பெருகி வருகிறது. குறிப்பாக ஆடுகளை குறி வைத்து நடக்கும் திருட்டு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

விவசாயம் பொய்த்து போவதால், எத்தனையோ விவசாயிகள், இந்த கால்நடைகளை நம்பியுள்ள நிலையில், இந்த ஆடுகளையும் குறிவைத்து மர்மநபர்கள் திருடி சென்றுவிடுவதால், கண்ணீரும் கம்பலையுமாக போலீசில் புகார் தந்துவருகிறார்கள்.
கால்நடைகள்: எந்தெந்த பகுதியில் ஆடுகள் உள்ளன? எவ்வளவு ஆடுகள் இருக்கின்றன? எங்கே கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன? என்பதையெல்லாம் முன்கூட்டியே மர்மநபர்கள் நோட்டமிட்டு, நள்ளிரவில் திருடிவிடுகிறார்கள். இந்த ஆடுகளை திருடுவதற்காக டெம்பா, அல்லது மிகப்பெரிய கார்களை கொண்டுவந்து, அதில் ஆடுகளை அள்ளிப்போட்டுக் கொண்டு போய்விடுகிறார்கள்..
சிலசமயம் ஆடுகள் கத்தக்கூடாது என்பதற்காக ஆடுகளின் வாயில் பிளாஸ்திரி ஒட்டிவிட்டு, அதற்கு பிறகு தூக்கி செல்கிறார்கள். சிலசமயம், பகல் நேரங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடச்செல்லும்போதும், இந்த கால்நடை திருட்டு நடக்கின்றன.. இதுபோன்ற நேரங்களில் உரிமையாளர்களை கொடூரமாக தாக்கிவிட்டு, ஆடுகளை கடத்துகிறார்கள். நேற்றைய தினம் தேனி மாவட்டத்தில், ஒரே நாளில், 10 ஆடுகள் காணாமல் போயிருக்கின்றன.
செம்மறி ஆடுகள்: தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை கிராமத்தை சேர்ந்தவர் பெரியகருப்பன் என்பவருக்கு 77 வயதாகிறது. இவர் செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார்.
மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் பின்புறம் தனியாருக்கு சொந்தமான தோப்பில் கிடை போட்டுள்ளார்.. நேற்றைய தினம், 5 ஆடுகள் மற்றும் 5 குட்டிகள் காணாமல் போய்விட்டதாம். எங்கெங்கோ ஆடுகளை தேடிப்பார்த்தும் கிடைக்காததால், தேவதானப்பட்டி போலீசில் புகார் தந்துள்ளார். 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆடுகள் திருடுபோனதால் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார் பெரியகருப்பன்.
ஆடுகள்: நேற்றைய தினம், ஆந்திராவில், ஆடுகளுக்காக ஒரு இளம்பெண்ணை கொலையே செய்துவிட்டார்கள்.. இந்துபுரம் மண்டலம் மலுகூர் கிராமத்தில் ஜெயம்மா என்ற பெண் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். காலையில் மேய்ச்சலுக்கு ஆடுகளுடன் போன ஜெயம்மா, சாயங்காலம் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் கலக்கமடைந்தனர். இதனால், பல இடங்களில் ஜெயம்மாவை தேடி பார்த்தார்கள்.. எங்குமே ஜெயம்மா கிடைக்கவில்லை.
இதனால் போலீசில் புகார் தந்ததையடுத்து, போலீசாரும் ஜெயம்மாவை தேடினார்கள்.. அப்போதுதான், கிராமத்தின் புறநகரில் உள்ள வயல்வெளியில் பெண்ணின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது, அங்கு சென்று பார்த்தபோதுதான், அது ஜெயம்மா என்று தெரியவந்தது. ஜெயம்மாவின் கழுத்து நெரிக்கப்பட்ட காயங்களை பார்த்த போலீசார், அது கொலை என்று உறுதி செய்தார்கள்..
கலக்கத்தில் விவசாயிகள்: ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற நிலையில், அவரிடமிருந்த 20 ஆடுகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். ஆடுகளுக்காகவே ஜெயம்மா கழுத்தை நெரித்து கொன்றுள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது என்றாலும், ஆடுகளை திருடுவதற்காக நடக்கும் வன்முறை சம்பவங்களை கண்டு விவசாயிகள் கலங்கி போய் கிடக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications