தேனி அருகே ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி காரை இரவில் வழிமறித்த மர்ம கும்பல்.. என்ன நடந்தது?
தேனி: தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா என்பவர் தேனி மாவட்டம் பெரியகுளம் முன்னாள் நகராட்சி தலைவராக இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இவரது குடும்பத்தினர், பெரியகுளத்தில் இருந்து மதுரை நோக்கி ஒரு காரில் சென்று கொண்டிருந்தார்கள். இவரது காரை நோக்கி தேவதானப்பட்டி அருகே வேல்நகர் பகுதியில் வைத்து 2 பேர் கல்லை எடுத்து எறிந்தனர். இதில் காரின் முன்பக்க கண்ணாடி விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைதாகி உள்ளார். இன்னொருவரை தேடி வருகிறார்கள்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா என்பவர் தேனி மாவட்டம் பெரியகுளம் முன்னாள் நகராட்சி தலைவராக இருந்துள்ளார். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக் குழு தலைவராகவும் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஓ.ராஜாவின் குடும்பத்தினர், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து மதுரை நோக்கி ஒரு காரில் சென்று கொண்டிருந்தார்கள். காரை, பெரியகுளத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 33) என்பவர் ஓட்டி சென்றிருக்கிறார்.

ஓ ராஜா குடும்பத்தினர் சென்ற கார் பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில், தேவதானப்பட்டி அருகே வேல்நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் இருந்து வந்த ஆட்டோ ஒன்று சாலையோரம் திடீரென நின்றது. அதில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் 2 பேர், கண் இமைக்கும் நேரத்தில் கீழே கிடந்த கல்லை எடுத்து கார் மீது வீசினர். இதில் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் வந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதைத்தொடர்ந்து லட்சுமணன் காரை அங்கு உடனடியாக நிறுத்தினார். தொடர்ந்து அவர், இதுகுறித்து அவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். அப்போது அவர்கள், டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து ஆட்டோவில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தேவதானப்பட்டி காவல் நிலையத்தில், கார் மீது நடந்த கல் வீச்சு சம்பவம் குறித்து ஓ ராஜாவின் டிரைவர் லட்சுமணன் புகார் அளித்தார். அதன் பேரில் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த 35 வயதாகும் பிரசாந்த் என்பவரை கைது செய்தனர். கார் மீது கல்லை வீசியதற்கான காரணம் குறித்து அவரிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications