சிறையில் 10 அடிக்கு மேல் நடக்க முடியாமல் சிரமப்பட்டார் ஜெயலலிதா! பெங்களூர் புகழேந்தி உடைத்த ரகசியம்!
தேனி: பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தொடர்ந்து 10 அடிக்கு மேல் நடக்க முடியாமல் ஜெயலலிதா சிரமப்பட்டார் என்றும் இதனை அங்கிருந்த காவலரே தன்னிடம் கூறியிருப்பதாகவும் பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா தண்டனை வழங்கியதும் நீதிமன்ற ஹாலில் இருந்த ஜெயலலிதா, மூத்த வழக்கறிஞர் குமாரை அழைத்து தனது காரில் கட்டப்பட்டிருந்த தேசியக் கொடியை கழற்றச் சொல்லுமாறு கூறியதாகவும் எவ்வளவு பெரிய இக்கட்டான தருணத்திலும் காரில் உள்ள தேசியக் கொடியை கழற்றச் சொல்ல வேண்டும் என்கிற அளவுக்கு கூர்மையாக யோசித்து செயல்பட்டவர் ஜெயலலிதா எனவும் பெங்களூர் புகழேந்தி பேசியிருக்கிறார்.

அதேபோல் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதும் அன்று மாலை பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயலலிதா, சிறை நுழைவு வாயிலில் இருந்து அவரது செல்லுக்கு செல்வதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் ஆனதாகவும் ஏனெனில் ஜெயலலிதாவால் 10 அடிக்கு மேல் தொடர்ந்து நடக்க முடியவில்லை எனவும் அந்தளவுக்கு அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது எனவும் தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கு கால் மூட்டு வலி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இதை ஏன் இப்போதுச் சொல்கிறேன் என்றால் என்று கூறிய பெங்களூர் புகழேந்தி, உடல்நிலையை வருத்தியும், தனது இன்னுயிரை கொடுத்தும் கட்சியையும், ஆட்சியையும் ஜெயலலிதா காப்பாற்றி வைத்துவிட்டுச் சென்றுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தங்களை கட்சி கொடி கட்டக்கூடாது, கட்சி வேட்டி கட்டக்கூடாது என்று சொல்கிறார் என்றும் இதற்கு எடப்பாடிக்கு என்ன உரிமை உள்ளது எனவும் பெங்களூர் புகழேந்தி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
தேனியில் நடைபெற்ற ஓ.பன்னிர்செல்வம் ஆதரவு நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய போது இதனைக் கூறினார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் டீம் மீண்டும் முழுவீச்சில் களமாடத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தான் இப்போது ஊர்தோறும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications