கன்னியாஸ்திரியாக போக விருப்பப்பட்ட ஆசிரியை.. திருமணம் செய்து வைத்ததால் எடுத்த முடிவு! தேனியில் சோகம்
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே திருமணம் நடந்த நாளிலேயே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாஸ்திரியாக செல்ல விரும்பியதாகவும், திருமணத்தில் சம்மதம் இல்லை என்பதாலும் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜ்தானி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன். தேனி அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் உதவியாளராக இருந்து வருகிறார். இவரது மகள் கவுசல்யா (வயது 24). கவுசல்யா ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சவுமியாவுக்கு திருமணம் செய்து வைக்க பரமேஸ்வரன் முடிவு செய்தார். இதற்கான வேலை நடந்து வந்தது. இதில், கம்பம் அருகே புதுப்பட்டியை சேர்ந்த பாலாஜி என்பவரை சவுமியாவுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு எடுத்தனர். இருவீட்டு சம்மதத்துடன் திருமண வேலைகள் நடந்து வந்தது. பாலாஜிக்கு சவுமியாவுக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. பாலாஜி பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
ரூமுக்குள் சென்று கதவை பூட்டிய புதுப்பெண்
நேற்று முன் தினம் காலையில் மாப்பிள்ளை வீட்டில் வைத்து இவர்களது திருமணம் நடந்தது. சவுமியாவுக்கு பாலாஜி தாலி கட்டினார். பின்னர் விருந்து பரிமாறப்பட்டது. இதன் பின்னர் மறுவீடு நிகழ்ச்சிக்காக பெண் வீட்டுக்கு புதுமண தம்பதியினர் அழைத்து வரப்பட்டனர். மகளை பார்த்ததும் தந்தை பரமேஸ்வரன் கண்ணீர் விட்டார். மறுவீடு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது மணமகனும் மணமகளும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
திடீரென மணப்பெண் சவுமியா முகம் கழுவிவிட்டு வருவதாக கூறி அவரது ரூமுக்குள் சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. கதவை தள்ளிப் பார்த்த போது உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. ஒருவேளை தூங்கியிருப்பாரோ என்று கதவை தட்டிப்பார்த்தனர். ஆனாலும் அவர் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த மாப்பிள்ளை மற்றும் இரு வீட்டு குடும்பத்தினரும் அந்த அறை கதவை திறக்க முயற்சி செய்தனர். ஆனாலும் கதவை திறக்க முடியவில்லை.
தூக்கிட்டு தற்கொலை
ஒருவழியாக கதவை உடைத்து சென்று உள்ளே பார்த்த போது, சவுமியா தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். அந்த ரூமில் உள்ள கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ராஜதானி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடந்தினர். மேலும் சவுமியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கன்னியாஸ்திரியாக செல்ல விருப்பம்
திருமணம் முடிந்த நாளிலேயே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சவுமியாவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தினர். இதில் முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் கன்னியாஸ்திரியாக செல்ல விருப்பப்பட்டதாகவும், இதனால் திருமணம் செய்ய சவுமியாவுக்கு விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது. விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்ததால், திருமணம் முடிந்த கையோடு அவர் இந்த சோக முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications