எங்க வந்து யார்கிட்ட “ஷோ” காட்டுறீங்க? சென்னை மெட்ரோவுக்கு தடையா இருப்பதே மோடி தான்: ஸ்டாலின் தாக்கு
தேனி: திராவிடக் கோட்டமாக இருக்கும் இடத்தில் ஷோ காட்டினால் எடுபடுமா? மோடியின் ரோடு ஷோ - ஃபிளாப் ஷோ ஆகிவிட்டது என விமர்சித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
லோக்சபா தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில், தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகிய இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "நீங்கள் அளிக்கும் வாக்கு என்பது உங்கள் தொகுதிக்கான எம்.பி.யைத் தேர்வு செய்வதற்காக மட்டுமல்ல, நீங்கள் அளிக்கும் வாக்கு மூலமாகத்தான், இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு ஜனநாயகவாதி வர முடியும். நீங்கள் அளிக்கும் வாக்கு மூலமாகத்தான், மக்களைப் பற்றி இரக்கப்படும் ஒரு மனிதர் பிரதமர் ஆகும் சூழ்நிலை உருவாகும். நீங்கள் அளிக்கும் வாக்கு மூலமாகத்தான், தமிழ்நாட்டை மதிக்கும் ஒருவர் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
எப்படிப்பட்ட பிரதமர் வர வேண்டும் என நாம் நினைக்கிறோமோ, அதேபோல், இப்போதைய பிரதமர் மோடி, எக்காரணத்தை கொண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதை மனதில் வைத்து நாம் வாக்களிக்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியாவை அமளியான இந்தியாவாக மாற்றிவிடுவார்கள். ஒருதாய் மக்களாக வாழும் நம்முடைய மக்கள் மனதில் வேறுபாட்டு விதைகளைத் தூவி, இந்தியாவையே நாசம் செய்துவிடுவார்கள்.
மீண்டும் ஒரு முறை மோடி ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. நாடாளுமன்றத்தில் விவாதம் இருக்காது. தேர்தல் என்பதே ஜனநாயகப்பூர்வமாக இருக்காது. மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்காது. சட்டமன்றங்கள் இருக்குமா என்பதே சந்தேகம். ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே உடை, ஒரே உணவு என்று ஒற்றை சர்வாதிகார நாடாக மாற்றிவிடுவார்கள். இவை அனைத்திற்கும் மேலாக, சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைத்துவிடுவார்கள்.
இத்தனை நாளாக வெளிநாடுகளுக்கு டூர் சென்ற பிரதமர் மோடி, தேர்தல் வந்துவிட்டதால், உள்நாட்டிற்குள் டூர் அடிக்கிறார். அவர் ஏதோ ஷோ காட்ட வருகிறார் என்று நான் சொல்லவில்லை! அவரே 'ரோடு ஷோ' காட்டுகிறேன் என்றுதான் சொல்லி இருக்கிறார்! நேற்று சென்னையில் எந்த இடத்தில் ஷோ காட்டினார்? தியாகராயர் நகர்! பிரதமர் அவர்களே! அந்த இடத்திற்கு ஏன் அந்தப் பெயர் என்று உங்களுக்குத் தெரியுமா?
நீதிக்கட்சித் தலைவர் தியாகராயர், சவுந்திர பாண்டியனார் பெயரில் இருக்கும் பாண்டி பஜார், பனகல் அரசர் பெயரில் இருக்கும் பூங்கா என்று திராவிடக் கோட்டமாக இருக்கும் இடத்தில் உங்கள் ஷோ காட்டினால் எடுபடுமா? உங்கள் ஷோ - ஃபிளாப் ஷோ ஆன உடனே, சமூக வலைத்தளங்களில், சென்னை வந்ததைப் பற்றி எழுதியபோது, சொல்கிறார்! சென்னை மெட்ரோ திட்டத்தை விரிவாக்கம் செய்யப்போகிறாராம்.
மோடி அவர்களே... அந்தத் திட்டத்திற்கு தடையாக இருப்பதே நீங்கள்தான்! சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால்தான் நிதி கிடைக்கவில்லை. அதனால்தான் திட்டப்பணிகள் தாமதமாகிறது. கடந்த 2020ல் மத்திய உள்துறை அமைச்சர் இந்தத் திட்டத்திற்காக அடிக்கல் நாட்டினார். ஆனால், அனுமதி கொடுக்கவில்லை! நான் முதலமைச்சரான பிறகு முதல் சந்திப்பில் இருந்து கோரிக்கை வைக்கிறேன். பிரதமரை நேரில் சந்தித்தும் பலனில்லை!
மதுரை எய்ம்ஸ் போன்று, சென்னை மெட்ரோவும் அடிக்கல்லோடு நிற்கக் கூடாது என்று இப்போது மாநில அரசின் நிதியில் இருந்து, மெட்ரோ பணிகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இதனால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு, பணிகள் மெதுவாக நடக்கும் நிலைமை! இந்தப் பணிகளால் ஆண்டுக்கு நமக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? 12 ஆயிரம் கோடி ரூபாய்! இத்தனை குளறுபடிக்கும் காரணம், மோடி. ஆனால், இத்தனையும் மறைத்து, பச்சைப்பொய் பேசுகிறார்.
சென்னையில் ஷோ காட்டிய மோடி, இன்று காலையில் வேலூர் சென்றிருக்கிறார். அங்கு அவர் இந்தியில் பேசும்போது கூட்டம் கை தட்டுகிறது! பலருக்கு என்ன சந்தேகம் என்றால், வெளிமாநிலங்களில் இருந்து, கூட்டத்துக்கு ஆட்களை அழைத்துக் கொண்டு வருகிறார்களோ என்பதுதான்! இதில், தமிழ்நாட்டை வளர்க்கப் போகிறேன் என்று இந்தியில் பேசி சபதம் எடுக்கிறார்" என விமர்சித்துப் பேசியுள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications