எங்க ஊருக்குள் எப்படி வரலாம்? போலீசையே அரிவாளால் வெட்ட வந்த போதை நபர்கள்.. தேனியில் அதிர்ச்சி வீடியோ
தேனி: தேனி மாவட்டத்தில் விசாரணை நடத்த சென்ற போலீசாரை, எங்கள் ஊருக்குள் எப்படி வரலாம் என கேட்டு தரக்குறைவாக இரு போதை ஆசாமிகள் அரிவாளை காட்டி பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது.
தேனி மவட்டம் பெரிய குளம் அருகே உள்ள தென்கரை பட்டாளம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தீபக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பர் காமராஜ் என்பவருக்கும் இடையே மோதல் இருந்துள்ளது. இந்த நிலையில், கஞ்சா மற்றும் மது போதையில் தீபக் ரவிச்சந்திரனும், காமராஜும் பிரபாகரன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

பிரபாகரன் வீட்டில் இல்லாத நிலையிலும் அவரது வீட்டு முன் நின்று ஆபாசமாக பேசியதோடு தரக்குறைவாக நடந்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில், பிரபாகரனின் தங்கையிடம் கத்தியை காட்டி மிரட்டியதாகவும் வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பிரபகாரனின் தங்கை புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அடுத்த சில மணி நிமிடங்களில் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக போலீசார் அந்த ஊருக்கு வருகை தந்தனர். ஆனால் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த தீபக் ரவிச்சந்திரனும் காமராஜும், போலீசாரையே எங்கள் ஊருக்கும் நீங்க எப்படி வரலாம்.. எனவும் யாரிடம் அனுமதி வாங்கினீர்கள்... என வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தரக்குறைவாக பேசியுள்ளனர்.
சாதியை பற்றி பேசியதாக வழக்கு தொடருவோம் என்றும் போலீசாரை மிரட்டியதோடு, போலீசாரை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இடுப்பில் இரண்டு பீர் பாட்டில்களை சொருக்கிக்கொண்டு போலீசாரிடம் தகராறில் இரு போதை ஆசாமிகளும் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. போலீசாரிடம் கத்தியை காட்டி மிரட்டியும் உள்ளனர்.
போலீஸ் வீடியோ எடுப்பதை பார்த்ததும், இந்த வீடியோவை எங்கே வேண்டும் என்றாலும் போய் காட்டு.. உங்களுக்கு இங்கே வர யார் அனுமதி கொடுத்தது... பஞ்சாயத்து தலைவர் அனுமதி இல்லாமல் இங்கே வரக்கூடாது...என ஏகத்திற்கும் ஒருமையில் போலீசாரையே மிரட்டும் தொனியில் பேசுகின்றனர். அங்கிருந்த பொதுமக்கள், போதை ஆசாமிகள் இருவரையும் பிடித்து நிறுத்தியும் போலீசாரை செல்லுமாறும் பேசும் காட்சிகளும் வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே, தகவல் அறிந்த தென்கரை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி பாபு நிகழ்விடத்திற்கு சென்று கஞ்சா போதையில் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட தீபக் ரவிச்சந்திரனை கைது செய்தார். போலீஸ் கைது செய்வதை அறிந்ததும் காமராஜ் தப்பி ஓடினார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
போதையில் போலீசாரையே இப்படி மிரட்டும் தொனியில் நடக்கிறார்களே சாதாரண பொதுமக்களின் நிலையை யோசித்து பாருங்கள் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் போலீசார், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க இன்னும் தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்போதுதான் இதுபோன்ற சட்ட விரோத செயல்கள் குறையும் எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications