idli kadai .. தனுஷ் தொடர்ந்து பார்க்கும் சென்டிமென்ட்.. தேனி கோயிலில் குடும்பத்துடன் தரிசனம்
தேனி: தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள சங்கராபுரம் தான் நடிகர் தனுஷின் சொந்த ஊர். சங்கராபுரம் கருப்பசாமி கோயில் என்பது நடிகர் தனுஷின் தாயார் வழி குலதெய்வக் கோயிலாகும். அந்த கோயிலுக்கு தனுஷ் ஒவ்வொரு படமும் வெளியாகும் முன்பு சென்று வருகிறார். அதேபோல் குடும்பத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்தின் போதும் தனுஷ் சொந்த ஊருக்கு வந்து கோயிலில் வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் இட்லி கடை திரைப்படம் வெளியாவதை ஒட்டி இன்று சங்கராபுரம் கருப்பசாமி கோயிலுக்கு சென்று வழிபட்டார்.
நடிகர் தனுஷின் தாய் தந்தையரின் சொந்த ஊர் தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள சங்கராபுரம் ஆகும். இங்கிருந்து தான் மதுரைக்கு கஸ்தூரி ராஜா மற்றும் அவரது மனைவி ஆகியோர் நடந்தே வந்ததாகவும், அங்கிருந்து ரயிலில் ஏறி சென்னை சென்றதாகவும் தனுஷ் கூறியிருந்தார். கஸ்தூரி ராஜா சினிமாவில் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறினாலும், ஒரு கட்டத்தில் நொடிந்து போனார். ஆனால் தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோர் சினிமாவில் தலையெடுத்து முன்னேறினார்கள். தனுஷ் இன்று இந்திய சினிமாவில் முக்கியமான நட்சத்திரமாக இருக்கிறார். செல்வராகவன் பிரபலமான இயக்குநராக இருக்கிறார்.

நடிகர் தனுஷ் சொந்த ஊரான தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள சங்கராபுரத்திற்கு அவ்வப்போது சென்று வருகிறார். அங்குள்ள கருப்பசாமி கோயில் நடிகர் தனுஷின் தாயார் வழி குலதெய்வக் கோயில். இந்தக் கோயில் தான் அவரது குடும்பத்தின் வேராகவும், ஆன்மீக மையமாக இருக்கிறது.
சங்கராபுரத்தில் மிகவும் பழமையான மற்றும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாக வழிபடப்படும் கருப்பசாமியை தனுஷ் அவ்வப்போது வந்து வழிபடுகிறார். தனுஷின் தாய் மாமாக்கள் மற்றும் குடும்பத்தினர் இங்கு தான் வசிக்கிறார்கள்.
தனுஷ்-ஐஸ்வர்யா திருமணம் முடிந்தவுடன், அவர்கள் முதலில் இந்தக் கோயிலுக்கு வந்துதான் வழிபாடு செய்தார்கள். அதன்பிறகு அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவருக்கும் இந்தக் கோயிலில்தான் தலை முடி காணிக்கை (மொட்டை) வழங்கப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் தனுஷ் வந்து செல்கிறார்.
கோயிலுக்கு வரும்போது, அவர் ஊருக்குள் சென்று தனது உறவினர்கள் மற்றும் சொந்த பந்தங்களுடன் நீண்ட நேரம் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் வரும் அக்டோபர் 1ம் தேதி தனது இட்லி கடை படம் வெளியாவதை ஒட்டி, பெற்றோர், மகன்கள் மற்றும் உறவினர்களுடன் வந்து தனுஷ் சாமி தரிசனம் செய்தார். தனுஷ் என்ன தான் சென்னை வந்தாலும் தனது குடும்ப மரபையும், வேரையும் கொண்டுள்ள குலதெய்வ வழிபாட்டையும், சொந்த ஊரையும் மறப்பதே இல்லை..












Click it and Unblock the Notifications