டிடிவி போட்டியிட்டால் வெல்வது எளிதல்ல.. தேனியில் அதிமுகவிற்கு பெரிய சிக்கல்.. யார் இந்த நாராயணசாமி?
தேனி: தேனி லோக்சபா தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நாராயணசாமியை அதிமுகவினர் பலருக்குமே தெரியவில்லை என்கிறார்கள்.. தேனியில் பெரிய செல்வந்தரான நாராயணசாமி அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு வேளை டிடிவி தினகரன் தேனியில் நின்றால், அதிமுக, திமுக வெல்வது எளிதாக இருக்காது என்கிறார்கள்..
தேனி லோக்சபா தொகுதி என்பது அதிமுகவின் கோட்டையாகும். இங்கு திமுக நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றது கடைசியாக 1996ம் ஆண்டு தான்.. அதற்கு முன்பு 1980ல் மட்டுமே வென்றது. இதனால் திமுக இந்த தொகுதியை எப்போதுமே கூட்டணிக்கு தந்துவிடும். குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்குத்தான் தந்துவிடும்.. காங்கிரஸ் கட்சி தான் இங்கு 2004, 2009ம் ஆண்டு வெற்றி பெற்றது. 2014, 2019களில் நடந்த தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெற்றது..

தேனி லோக்சபா தொகுதியை பொறுத்தவரை, முக்குலத்தோர், தலித், நாயுடு, கவுண்டர், செட்டியார், பிள்ளைமார், இஸ்லாமியர்கள் கணிசமாக வாழ்கிறார்கள். இதில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக முக்குலத்தோர் வாக்குகள் முதல் இடத்தில் உள்ளது.. இரண்டாவது இடத்தில் தலித்துகள் உள்ளனர். சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை பெரியகுளம் தொகுதியில் தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள அதிகமாக உள்ளனர்.
கம்பம் தொகுதியில் கவுண்டர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ளனர். உசிலம்பட்டி, சோழவந்தான், போடி மற்றும் ஆண்டிப்பட்டியில் முக்குலத்தோர், நாயுடு மற்றும் தலித்துகள் அதிகமாக உள்ளனர். ஒட்டுமொத்தமாக பார்த்தால் தேனி லோக்சபா தொகுதியில் முக்குலத்தோர் ஓட்டுகள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.
இந்நிலையில் 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது ஏற்பட்ட நெருக்கத்தில் தான், பெரியகுளம் நகராட்சி தலைவராக இருந்த ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் உச்சம் பெற்றார். தேனியில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. இதேபோல் ஓ பன்னீர்செல்வத்திற்கு கணிசமான ஆதரவு உள்ளது. இந்நிலையில் தற்போது டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள். அதுவும் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் ஆதரவில் உள்ளதால் களம் அதிமுகவிற்கு பெரும் சவாலாக உள்ளது.
இதை உணர்ந்த திமுக, டிடிவி தினகரன் போட்டியிட்டால் காங்கிரஸ் வெற்றி பெறுவது எளிதாக இருக்காது என்பதை கணித்து தான், தானே அந்த தொகுதியை வாங்கி உள்ளது. அதுமட்டுமின்றி, டிடிவி தினகரனின் சிஷ்யரான தங்கத்தமிழ்செல்வனை களம் இறக்கி உள்ளது. இப்படியாக நிலைமை இருக்க, அதிமுகவில் இருந்து வேட்பாளராக நாராயணசாமி என்பவரை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நாராயணசாமி யார் என்று பார்த்தால், தேனி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் பொறுப்பு வகித்த நிலையில் தற்போது தேனி கிழக்கு ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். இவரது முழு பெயர் VT. நாராயணசாமி.. இவரது தந்தை பெயர் PNV. திருவேங்கடம்.
1960ம் ஆண்டு பிறந்தவர். நாராயணசாமிக்கு 64 வயது ஆகிறது. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி படிப்பு முடித்தவர். இவரது மனைவி பெயர் ராணி. இவருக்கு சூர்யபிரகாஷ் என்ற மகனும், சுகன்யா என்ற மகளும் இருக்கிறார்கள்.
இவர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் விவசாயமும் செய்து வருகிறார். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் இருக்கிறார். 1982ல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரான நாராயணசாமி இருந்தார். கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2023 வரை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக இருந்தார். தற்போதைய கட்சியில் தேனி கிழக்கு ஒன்றிய செயலாளராக இருந்தார்.
ஏற்கனவே கடந்த 2014 மற்றும் 2019 தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். அப்போது வாய்ப்பு தரப்படவில்லை. இதேபோல் கடந்த 2011, 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். அப்போதும் அவருக்கு அதிமுக தலைமை வாய்ப்பு தரவில்லை
தற்போது டிடிவி தினகரன் நிற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், அதிமுகவில் முக்கிய தலைவர்கள் தேனியில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் செல்வந்தரான நாராயணசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேனியில் டி.டி.வி.தினகரன் போட்டியிட உள்ளதாக கூறப்படும் நிலையில், தி.மு.க சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளதால், தேனி தொகுதி நிச்சயம் அதிமுகவிற்கு கடும் சவாலாக இருக்கும் என்கிறது கள நிலவரம்.












Click it and Unblock the Notifications