கடைசியில் இங்கேயும் வந்தாச்சு..ஓபிஎஸ் ஆதரவாளர் வீட்டில் வருமான வரி சோதனை! பரபரப்பில் போடிநாயக்கனூர்
தேனி: அங்கே ரெய்டு செய்து, இங்கே ரெய்டு செய்து, இப்போது துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடும் போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அதிமுக பிரமுகர் வீட்டிலும், வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. எனவே வாக்காளர்களிடம் பணம் பட்டுவாடா செய்யும் பணிகள் இந்த காலகட்டத்தில்தான் தீயாக நடைபெறும் என்று வருமான வரித்துறைக்கு பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
பணம் கைமாறுவது மிக மிக அதிக அளவில் இருக்கும் என்பதால் கண்களில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு சோதனைகளை நடத்தி வருகின்றனர் வருமான வரித்துறையினர்.

வருமான வரி சோதனை
கடந்த வாரம், திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் திமுக பிரமுகர் எவ வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி இருந்தனர். நேற்று சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டில் வருமான வரித்துறையினர் 12 மணி நேரங்களாக சோதனை நடத்தினர்.

கண்டனங்கள்
திமுக தலைவரின் மகள் வீட்டிலேயே வருமான வரித்துறை சோதனை நடத்தி விட்டதால் அந்த கட்சி தொண்டர்கள் மிகவும் கொந்தளித்து போனார்கள். அதிமுக பிரமுகர்கள் இடங்களில் சோதனை நடத்தாமல், திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் மட்டும் குறி வைக்கப்படுவதாக திமுக கூட்டணியை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

திடீர் திருப்பம்
இதனிடையில் பெரும் திருப்பமாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடும் போடிநாயக்கனூர் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக பிரமுகர் குறிஞ்சி மணி வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் தேனி மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் பதவியில் இருந்து வருகிறார்.

ஓபிஎஸ் அலுவலகம் அருகே
துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அலுவலகம் அருகேதான் குறிஞ்சி மணி வீடு அமைந்துள்ளது. ஓபிஎஸ் அலுவலகத்திற்கு பக்கத்து வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடப்பதும், அதுவும் அதிமுக பிரமுகர் வீட்டில் நடப்பதும், அந்த தொகுதி அதிமுகவினரிடையே பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கே சோதனை நடத்தி, இங்கே சோதனை நடத்தி, கடைசியில் அதிமுக பிரமுகர், அதுவும் ஓபிஎஸ்சுக்கு நெருக்கமான பிரமுகர் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்துவதால் பரபரப்பில் கிடக்கிறது தேனி மாவட்டம்.

புதுக்கோட்டை
இதேபோலத்தான் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் ராமதிலகம் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். திருமயம் அருகே உள்ள கோட்டையூரில் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் முன்னாள் அமைச்சர் ரகுபதியின் ஆதரவாளர் இவர். இவரது வீட்டில் வருமான வரித்துறையைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குழு சோதனை நடத்தினர்.












Click it and Unblock the Notifications