பத்திரப்பதிவு.. 2 ஏக்கர் நிலத்தை கிரையம் செய்தது எப்படி? தேனி தேவாரம் சார் பதிவாளர் செய்த காரியம்?
தேனி: ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்கள் தயாரித்து கிரையம்பதிவு செய்த 6 பேர் மீது போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் சார் பதிவாளரே சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுவது கூடுதல் அதிர்ச்சியை தந்து வருகிறது.
தமிழ்நாட்டில் சமீபகாலமாகவே, போலியான பத்திரங்களை தயார் செய்து, உண்மையான பத்திரிகை போலவே உருவாக்கி நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.

மோசடிகள்: இதுபோன்ற மோசடிகளை முற்றிலும் ஒழிக்கும் முயற்சியில் தமிழக பதிவுத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எனினும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை குறையவில்லை.
இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைதாகியும் வருகிறார்கள். இதில், உயர் அதிகாரிகளே கைதாகி வருவது கவலையை தந்து வருகிறது.. அதிலும் சில பெண் அதிகாரிகளே லஞ்சம் வாங்கி கைதாவது அதற்கு மேல் அதிர்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்றைய தினம், தேனியில் நடந்த மற்றொரு மோசடி சம்பவம் பெரும் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.
நிலம் அபகரிப்பு: கோவையை சேர்ந்த ஜெயக்கொடியின் மனைவி பார்வதி. இவருக்கு சொந்தமாக போடி சங்கராபுரத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 2000 நவம்பர் 27ம்தேதி, இந்த நிலத்தை, பாலார்பட்டி பெரியகருப்பன், சங்கராபுரம் கணேசன் ஆகியோர் மோசடி செய்து அபகரித்துள்ளனர்.
அதாவது, பார்வதி என்ற பெயரில் மற்றொரு பெண்ணை தேவாரம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு, இவர்கள் 2 பேரும் அழைத்து சென்றிருக்கிறார்கள்.. அங்கு பெரியகருப்பனுக்கு பார்வதி நிலத்தை கிரையம் செய்து பத்திரப்பதிவு செய்துள்ளனர். பிறகு, போடி சங்கராபுரம் கணேசனுக்கு பெரியகருப்பன் கிரையம் பெற்றதிலிருந்து 1 ஏக்கர் 89 சென்ட் நிலத்தை கிரையம் முடித்து தந்துள்ளார்.
போலி பதிவுகள்: அதன்பிறகு இந்த நிலத்தை, திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி பாண்டியராஜன், சென்னை தேனாம்பேட்டை வரதராஜபுரம் ஜீவா, தேவாரம் ஐயப்பன் கோயில் தெரு செந்தில்குமார், சின்னமனுார் ரமேஷ் ஆகியோர் வாங்கியிருக்கிறார்கள். ஆனால், இந்த போலி பதிவுகளை தேவாரம் சார்பதிவாளர் கண்காணிக்கவில்லையாம்.
இதனால் பாதிக்கப்பட்ட கோவை பார்வதி, தேவாரம் சார்பதிவாளர் உட்பட6 பேர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் தந்துள்ளார்.. இந்த புகாரின்மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட எஸ்பி உத்தரவிட்டதையடுத்து, தேவாரம் சார்பதிவாளர் உட்பட 6 பேர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆள் மாறாட்டம்: லஞ்ச புகார்கள் அதிகரித்து வரும்நிலையில், ஆள் மாறாட்டம் செய்து, நிலத்தை கிரையம் செய்துள்ளது, பெரும் பரபரப்பை தேனி மாவட்டத்தில் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications