ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜாவுக்கு சிக்கல்... கைலாசநாதர் கோவில் பூசாரியின் தந்தை தேனி கலெக்டரிடம் பரபரப்பு மனு
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த நாகமுத்து என்பவர், அங்குள்ள புகழ் பெற்ற கைலாசநாதர் கோவிலில் பூசாரியாக இருந்தார். இவர் திடீரென உயிரை மாய்த்துக் கொண்டார். இது தொடர்பான வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தம்பியான ஓ.ராஜா விடுதலை செய்யப்பட்டார். இந்த விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டும் என்று உயிரைவிட்ட பூசாரியின் தந்தை, தேனி கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் என்பவருடைய மகன் நாகமுத்து (22வயது) . கடந்த 2012ம் ஆண்டு திடீரென உயிரை மாய்த்துக் கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கோவில் அறங்காவலராகவும், பெரியகுளம் முன்னாள் நகராட்சி தலைவராகவும் இருந்த ஓ.ராஜா (முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ), தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி உள்பட 7 பேர் மீது பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல்லில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே தென்கரை பேரூராட்சி முன்னாள் தலைவர் பாண்டி இறந்து விட்டார். வழக்கு விசாரணை முடிவில், ஓ.ராஜா உள்பட 6 பேரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தற்கொலை செய்த நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வருகை தந்தார். அங்கு நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், கலெக்டர் ஷஜீவனாவிடம் அவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், 'எனது மகன் நாகமுத்து தற்கொலை செய்த போது, ஓ.ராஜா உள்பட 7 பேர் தான் தனது தற்கொலைக்கு காரணம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் அனைவரையும் திண்டுக்கல் சிறப்பு கோர்ட்டு விடுதலை செய்தது. எனவே, என் மகன் தற்கொலை வழக்கில் தொடர்புடையவர்களின் விடுதலையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விரைவில் மேல்முறையீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குனர் எவிடென்ஸ் கதிர் மற்றும் தற்கொலை செய்து கொண்ட பூசாரி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ், தாய் சுப்புத்தாய் ஆகியோர் மதுரையில் கடந்த நவம்பர் 15ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்பேது அவர்கள் கூறுகையில்,
பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் ஓ.ராஜா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டது அதிர்ச்சியாக உள்ளது. தலித் பூசாரியாக பணியாற்றக் கூடாது என நாகமுத்து தாக்கப்பட்டார். போலீசில் புகார் அளித்தற்காக ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா உள்ளிட்டோரால் பூசாரி நாகமுத்து மிரட்டப்பட்டு தாக்கப்பட்டார். தொடர்ந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தால் கடந்த 2012ல் நாகமுத்து உயிரைவிட்டார். ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்ததால், நாகமுத்து தற்கொலை வழக்கில் முறையான விசாரணை நடக்கவே இல்லை
இவர்களை விடுதலை செய்ததை எதிர்த்து, மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். நாகமுத்து குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, அவரது பெற்றோருக்கு ரூ.12 ஆயிரம் ஓய்வூதியம், அவரது தங்கைக்கு அரசு வேலை வழங்க வேண்டும். உச்சநீதிமன்றம் வரை இந்த வழக்கை நிச்சயம் எடுத்து செல்வோம். தற்கொலை கடிதத்தில் நாகமுத்து குறிப்பிட்ட காவல் அதிகாரிகளின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை. விடுதலைக்கான காரணத்தை நீதிமன்றம் சொல்லவில்லை. எஸ்.சி-எஸ்.டி வழக்குகளின் விசாரணை முறையாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க அரசு கமிட்டி அமைக்க வேண்டும்" என்று கடந்த மாதம் செய்தியாளர் சந்திப்பின்போது வலியுறுத்தினார்கள்.












Click it and Unblock the Notifications