சோதனை மேல் சோதனை! நம்மாளுகளே இப்படி பண்ணா எப்படியா? கடுப்பான ஓபிஎஸ்! சைலண்ட் தேனி ர.ர.க்கள்!
தேனி : அரசியலில் மட்டுமல்லாது தனிப்பட்ட முறையில் மிக மோசமான மனநிலையில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. காரணம் அவர் தரப்பில் நடைபெற்ற இரு கொள்ளை சம்பவங்கள்தேனி மாவட்ட அரசியலில் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
அதிமுகவின் இருவரும் தலைவர்களாக கடந்த ஐந்து ஆண்டுகளாக வலம் வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தற்போது நட்சத்திர நாயகர்கள் போல இரு உருவங்களாக செயல்பட்டு வருகின்றனர்.
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அலங்கரித்த அந்த நிரந்தர பொதுச் செயலாளர் எனும் அதிகாரமிக்க பதவியை அடையப் போவது யார் என்பதற்கான யுத்தம் நீண்ட காலமாக நடைபெற்று வரும் நிலையில் அதற்கு தற்போது வரை முடிவு எட்டப்படவில்லை. இனியும் எட்டப்படுமா என்பது கேள்விக்குறிதான்.
போர்க்களமான சட்டசபை.. எடப்பாடி அருகே ஓ.பன்னீர்செல்வம்! அதிமுக உறுப்பினர்கள் கூச்சல்!

அதிமுக விவகாரம்
அதிமுகவில் நிர்வாகிகள் ஆதரவு 95 சதவீதத்தை இழந்த பிறகு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் பொருளாளரும் நான் தான் என கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கி அரசியல் செய்து வருகிறார் ஓபிஎஸ். அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் சில சார்பு அணி நிர்வாகிகள், ஒரு எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓ,பன்னீர்செல்வத்தை அடுத்தடுத்து சந்தித்து ஆதரவு தெரிவித்து அந்த நிகழ்ச்சிகளும் தற்போது குறைந்துவிட்டது. இதை அடுத்து என்ன செய்யலாம் என பல்வேறு யூகங்கள் உலாவி வருகின்றனர்.

ஓ. பன்னீர்செல்வம்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு உரிய சாதகமான நிகழ்வுகள் நடைபெறும் என கூறப்படுகிறது. ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லையென்கின்றனர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள். என்ன நடந்தாலும் ஓபிஎஸ்க்கு இடமே இல்லை எனக் கூறிவிட்டனர். இப்படி அடுத்தடுத்து போயிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை தனிப்பட்ட முறையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. காரணம் அவர் தரப்பில் நடந்த இரு கொள்ளை சம்பவங்கள் தான்.

கொள்ளை சம்பவம்
சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் சென்னை சென்றிருந்த நிலையில் அவரது பண்ணை வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த எல்இடி டிவி ஒன்றை கொள்ளையடித்து சென்றதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் ஓபிஎஸ் பண்ணை வீட்டை சுற்றி சுமார் 15 அடி சுவர் இருக்கும். அதில் ஏறிக்குறித்து உள்ளே சென்று பொருட்களை திருடிக் கொண்டு மீண்டும் சுவற்றில் ஏறி குதித்து தப்பிச்செல்லும் அளவுக்கு தடகளப் போட்டிகளில் வென்றால் கூட முடியாது என்கின்றனர் உள்ளூர் நிர்வாகிகள்.

சிறப்பு கவனிப்பு
மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களை சந்தித்து அங்கு வைத்து சிறப்பு கவனிப்பு அளிக்க ஏற்பாடு செய்திருந்தார். தற்போது கொள்ளை சம்பவத்தால் அந்த நிகழ்ச்சி தள்ளிப் போயிருக்கிறது. தற்போது தேனி சென்றிருக்கும் ஓ.பன்னீர்செல்வம் இன்று அல்லது நாளை நிர்வாகிகளை சந்தித்து தீபாவளி வாழ்த்துக்கள் மட்டும் தெரிவிப்பார் என கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக முக்கிய நபர் ஒருவருக்கு கொடுத்து அனுப்பி இருந்ததாக சொல்லப்படும் பணத்தோடு டிரைவர் ஓட்டம் எடுத்தார். அவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருங்கிய நண்பரும் அதிமுக நிர்வாகி ஒருவரின் ஓட்டுனர்.

பணம் கொள்ளை
அப்போது பெரிய அளவிலான பணம் கொள்ளை போனதாக தகவல் வெளியான நிலையில் சுமார் 50 லட்சம் மட்டுமே மாயமானதாக புகார் அளிக்க்கப்பட்டது. ஆனால் கொள்ளை போன தொகை மூன்று அல்லது நான்கு கோடி இருக்கும் எனவும் அதற்கு பிறகு அந்த வழக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. பணம் மீட்க்கப்பட்டதா மாயமானவர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்த தகவல்களும் கிடைக்கவில்லை இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கடும் மன உளைச்சலில் இருநிலையில் அவரது வீட்டிலும் கொள்ளை சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

ஓபிஎஸ் அதிருப்தி
இந்த கொள்ளை சம்பவங்கள் ஓபிஎஸ் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. வெளிநபர்கள் யாரும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பில்லை எனக் கூறப்படும் நிலையில் ஓபிஎஸ்க்கு தெரிந்தவர்களோ அல்லது அவர்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாகவோ கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகிறதா எனவும் யூகங்கள் பரவி வருகின்றன. எது எப்படி அரசியலிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையிலும் சோதனைகளை சந்தித்து வருகிறார் ஓபிஎஸ் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.