எங்களை பார்த்தால் பாவமாக இல்லையா.. தேர்தலில் போட்டியிட ஒருங்கிணைப்பு குழுவை தொடங்கவில்லை.. ஓபிஎஸ்!
தேனி: சட்டசபைத் தேர்தலில் போட்டி என்ற முடிவை எடுக்கவில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தொண்டர்களின் ஆதரவை நிரூபிக்கவே ராமநாதபுரத்தில் போட்டியிட்டதாக கூறிய ஓபிஎஸ், அதிமுக தொண்டர்களின் உரிமையை மீட்கவே சட்டப்போராட்டம் நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அமமுக இணைந்துவிட்ட சூழலில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் முடிவு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது தொண்டர்களின் கருத்தை எழுத்துப்பூர்வமாக கொடுக்க அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனப்பூர்வமாக கருத்துக்களை வெளிப்படையாக பேச வேண்டும் என்று கோஷமிட்டனர். சுமார் 2 மணி நேர ஆலோசனைக்கு பின், ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஓபிஎஸ் பேசுகையில், அதிமுக மீண்டும் பலமான இயக்கமாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவை முதல்வராக கொண்டு சென்ற மாவட்டம் தேனி. அதிமுக தொண்டர்களின் உரிமையை மீட்கவே நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம். அந்தப் போராட்டத்தில் இருந்து மாறுபட வேண்டுமென்றால், பிரிந்து கிடக்கும் அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதே தலையாய கோரிக்கை.
அதிமுக பிரிந்து இருக்கிறதா, ஒன்றிணைந்து இருக்கிறதா என்பது மக்களுக்கு தெரியும். டிடிவி தினகரன் நட்பின் அடையாளமாக எங்களை கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். டிடிவி தினகரன் மற்றும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதனைதான் நானும் சொல்கிறேன்.
ஏற்கனவே என்டிஏ கூட்டணியில் எடப்பாடி பழனிசாமியும், டிடிவி தினகரனும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். டிடிவி தினகரன் நினைத்தால் எங்களை ஒன்றிணைக்க முடியும். நானும் இணைய வேண்டும் என்றே சொல்கிறேன். எடப்பாடி பழனிசாமியும் சொல்லிவிட்டால் இணைந்துவிடலாம் தானே.. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் தொடங்கப்பட்டதே அதிமுக ஒன்றிணைய தான்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்தக் கழகம் தொடங்கப்படவில்லை. தனிக் கட்சி குறித்தோ, தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதிமுக ஒன்றிணைவதற்கு நான் ரெடி.. இதற்கு டிடிவி தினகரன் மற்றும் அவரின் அண்ணன் எடப்பாடி பழனிசாமி ரெடியா என்று கேட்டு சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications