'50 ஆண்டு கனவு வேஸ்டா போச்சு'.. தேனியில் தொட்டாலே கையோடு வந்த தார் சாலை.. 2 கோடி ரூபாய் வீணா?
தேனி: தேனி அருகே 50 வருடங்களாக சாலை கேட்டு போராடிய மக்களுக்கு 2 கோடி ரூபாயில் போடப்பட்ட தார்சாலை, அமைத்த 3 வது நாளிலேயே எடுக்க எடுக்க அப்படியே கையோடு வந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த பொம்மி நாயக்கன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கள் கூறுகையில். இந்த ரோடு ஆண்டிப்பட்டி டி சுப்புலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பொம்மிநாயக்கன்பட்டி வரை உள்ள இணைப்பு சாலையாகும்.

இந்த ரோடு எங்களுடைய 50 ஆண்டு கனவு ஆகும். இதற்காக பலம் போராட்டம், பல கோரிக்கைகள் வைத்து, நாங்கள் கலெக்டர், துறை அமைச்சரை சந்தித்து போராடி பெறப்பட்ட ரோடு ஆகும். ஆனால் இன்று தரமற்ற முறையில் ரோடு போடப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் பேப்பர் கனம் கூட இல்லை..
இந்த ரோடு எடுக்க எடுக்க கையோடு வருது. நேற்று ஒரு பெரியவர் விழப்போனார்... என்னவென்று பார்த்தால் ரோடு கையோடு வருகிறது.. தொட்டாலே கையோடு வரும் வகையில் ரோடு போட்டிருக்கிறார்கள். தயவு செய்து இந்த ஒப்பந்ததாரரை மாற்றிவிட்டு மீண்டும் எங்களுக்கு நல்ல முறையில் ரோடு போட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த தரமற்ற சாலையை அமைத்ததால் அரசு நிதி சுமார் 2 கோடியே 35 லட்சம் ரூபாய் வீணாகிவிட்டது என்பது வருத்தமாக உள்ளது. மீண்டும் இந்த ரோட்டை சரி செய்து தரமானதாக அமைக்க வேண்டும். இந்த சாலையை டி சுப்புலாபுரம் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சாலையை அமைக்க வேண்டும் என்று 50 வருடமாக போராடியிருக்கிறோம்..

இந்த சாலை வழியாகவே பொம்மிநாயக்கன்பட்டி விவசாயிகள், டி சுப்புலாபுரம், ராஜகோபலன்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களுக்கு செல்கிறார்கள். இந்த சாலை இல்லாமல் மெயின் ரோடு வழியாக போக வேண்டும் என்றால் 10 கிமீ சுற்றி செல்ல வேண்டும். ஆனால் பொம்மிநாயக்கன்பட்டி கிராம மக்கள் இந்த சாலை வழியாக சென்றால் வேறு 5 கிமீ தான் ஆகும். மதுரை மெயின்ரோடு செல்லவும் 5 கிமீ தூரம் குறைவு ஆகும்" இவ்வாறு கூறினார்கள். இதனிடையே புதிய சாலை அமைத்து 3 நாட்கள் ஆகும் நிலையில் சாலையை இளைஞர்கள் பெயர்த்திடுக்க முயற்சித்து சாலை கையோடு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications