செவ்வாழை தேனியில் தந்த சர்ப்ரைஸ்.. இந்த பனியிலும் வாழை இலை, வாழைத்தார்களுக்கு மவுசு.. விலையை பாருங்க
தேனி: சபரிமலை சீசன் மற்றும் தை மாத தைப்பூச திருவிழா காரணமாக வாழை தார், வாழை இலைகளுக்கான தேவை சமீப நாட்களாகவே அதிகரித்துள்ளது. கோயில்கள், திருமண விழாக்கள், அன்னதானம், பூஜைகள் போன்றவற்றிற்காக வாழை இலைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், சந்தையில் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வானது தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் எதிரொலித்துள்ளது.
கடும் பனிப் பொழிவு தமிழகம் முழுவதும் அதிகமாக இருந்தாலும், பண்டிகைகள் வருவதால் வாழை இலையின் தேவை அதிகம் உள்ளது... பனிப்பொழிவு காரணமாக விற்பனைக்கு கொள்முதல் செய்யப்படும் வாழை இலை குறைந்த அளவே வருவதாகவும், இன்னும் சில மாதங்களுக்கு இந்த விலை உயர்வு நீடிக்கும் என்றும் கடந்த மாதம் வாழை விவசாயிகள் தெரிவித்திருந்தனர். .

தேனி வாழை இலை விலை
இந்நிலையில் வாழையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. குறிப்பாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் வாழை இலையின் விலை அதிகரித்துள்ளது. இதற்கு சில முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன..
குறிப்பாக, சென்னை மற்றும் திருச்சி போன்ற பெருநகரங்களுக்கு ஏற்றுமதி அதிகரித்துவிட்டதாக வாழை விவசாயிகள் கூறுகிறார்கள்.. மேலும் வரத்து குறைவாக இருப்பதாலும் விலை உயர்ந்துள்ளதாகவும் சொல்கிறார்கள்..
ஆண்டிப்பட்டி மார்க்கெட்
நாளை மறுநாள் ஆங்கில புத்தாண்டு என்பதால், ஆண்டிப்பட்டி மார்க்கெட்டில் வாழை இலை விலை கடுமையாக உயர்ந்து, ஒரு கட்டு 700 ரூபாய் வரை ஏலம் போகிறது.. அதேபோல தர்மத்துப்பட்டி, புள்ளிமான் கோம்பை மற்றும் அணைக்கரப்பட்டி போன்ற பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் வாழை இலைகள் ஆண்டிப்பட்டி மார்க்கெட்டில்தான் ஏலம் விடப்படுகின்றன.
இப்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால், ஆண்டிப்பட்டி பகுதியில் இலைகளின் வரத்து மிகவும் குறைந்துள்ளதாக தெரிகிறது.. இதனால் கடந்த வாரம் ஒரு கட்டு இலை 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இப்போது 7 மடங்கு உயர்ந்துவிட்டதாம்.. இந்த விலை உயர்வானது பொதுமக்களுக்கு அதிருப்தியை தந்தாலும், விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகங்கை - செவ்வாழை
சிவகங்கை மாவட்டத்திலும் வாழை இலை, வாழை தார்கள் கவனம் பெற்றுள்ளன.. வி.மலம்பட்டி பகுதியில் வாழைத்தார் மற்றும் வாழை இலைகளுக்கான பெரிய மொத்த விற்பனை மற்றும் ஏல மையம் செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் வாரத்திற்கு மூன்று நாட்கள், அதாவது ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாழை ஏலம் நடைபெறுகிறது.
இந்த ஏல மையத்தில் பூவன், ஒட்டு, ரஸ்தாளி, பச்சை, சக்கை, செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு ரக வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்தவண்ணம் உள்ளன..
படு பிசியான சந்தைகள்
வாரத்திற்கு சராசரியாக 20 ஆயிரம் வரை வாழைத் தார்கள் மற்றும் சுமார் ஆயிரம் இலைக் கட்டுகள் (ஒரு கட்டு என்பது 200 இலைகள்) சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனால் சிவகங்கை மட்டுமல்லாமல் சுற்றுப்புற மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் இந்த சந்தைக்கு வந்து வாங்கி செல்வதால், இந்த மாக்கெட் படு பிசியாக உள்ளது..
கமிஷன் கடைகளில் நடைபெறும் ஏலத்தில், பழத்தின் தரம் மற்றும் ரகத்தைப் பொறுத்து ஒரு வாழை தாரின் விலை ரூ.550 முதல் ரூ.1,200 வரை விற்கப்படுகிறது. இதனால் வியாபாரிகள் நல்ல லாபம் பெறும் சூழல் நிலவுகிறது.
வாழைத்தார்கள் - தரகர்கள்
எனினும், இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு முழுமையாக பயன் தரவில்லை என்றே சொல்லலாம்.. காரணம், சமீப காலமாக தோட்டங்களுக்கே நேரடியாக சென்று வாங்கும் சிறு வியாபாரிகளும், தரகர்களும், விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலையில் வாழை தார்கள் மற்றும் வாழை இலைகளை வாங்கி செல்கிறார்கள்..
ஏல மையத்திற்கு கொண்டு வந்தால் கூடுதல் விலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும், போக்குவரத்து செலவு, காத்திருப்பு, ஏலத்தில் விலை குறையலாம் என்ற அச்சம் போன்ற காரணங்களால் பல விவசாயிகள் நேரடியாக தோட்டத்திலேயே விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்களாம்..
அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
இதனால், கமிஷன் கடைகளில் உயர்ந்த விலையில் விற்கப்படும் வாழைத்தார்கள், விவசாயிகளிடம் இருந்து சொற்ப விலைக்கே வாங்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதுமட்டுமல்ல, சீசன் காலத்தில் விலை உயர்ந்தும், அதற்கான உண்மையான லாபம் விவசாயிகளுக்கு செல்லாமல், தரகர்களுக்கே அதிகமாக சென்றுவிடுகிறதாம்.. எனவேதான், நேரடி ஏலம், அரசு கண்காணிப்பு, குறைந்த கமிஷன் முறைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் விடுத்துள்ளனர்..












Click it and Unblock the Notifications