சர்ருனு ஏறுது..இல்ல பாதாளத்துக்கு சரியுது! ஆட்டம் காட்டும் வெங்காயம் விலை! கண்ணீர் விடும் விவசாயிகள்
தேனி: தேனியில் கடந்த சில நாட்களாக திடீரென உச்சத்தை சந்தித்து வந்த சின்ன வெங்காயத்தின் விலை தற்போது திடீரென சரிவை சந்தித்திருக்கிறது. ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக கவலையில் இருந்த இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் வெங்காயத்திற்கான தனி சந்தை திண்டுக்கல்லில் அமைந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த சந்தை மற்றும் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை ஆகியவற்றில் இருந்து தான் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அனுப்பப்படுகின்றன.

இந்த நிலையில் தொடர் மழை மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வரத்து குறைந்ததால் திண்டுக்கல் வெங்காய சந்தைக்கு வெங்காயத்தின் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வந்தது.
தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை சின்ன வெங்காயம் விற்பனையானது. தீபாவளி பண்டிகை முடிந்ததும் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது திடீரென உயர்ந்தது. அதாவது கடந்த வாரத்தில் ஒரு கிலோ வெங்காயம் 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனையானது. ஒரு வார இடைவெளிக்குள் 40 ரூபாய் வரை வெங்காயத்தின் விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் கவலை அடைந்தனர்.
மேலும் சில்லரை விற்பனை விலையில் 100 ரூபாய் வரை வெங்காயம் விற்பனையானதால் பட்ஜெட்டில் துண்டு விழும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது தேனி போடி பகுதியில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறுகின்றனர் விவசாயிகள். அப்பகுதியில் சூழபுரம், சிலமரத்துப்பட்டி, அம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது.
அங்கிருந்து மதுரை, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள மார்க்கெட்களுக்கு மொத்தமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது மே மாதம் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. விளைச்சல் நன்கு அதிகரித்து நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை உயரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த சின்ன வெங்காயங்களை இருப்பு வைத்திருந்தனர்.
மேலும் வெளியூர்களுக்கு அனுப்பாமல் உள்ளூர்களுக்கு மட்டுமே வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே தொடர் மழை மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக வெங்காயங்கள் நிறம் மாறி அழுகியதாக கூறப்படுகிறது. மேலும் ஈரத் தன்மையால் வெங்காயம் முளைக்கத் தொடங்கியது. இதனால் வெளியூர் மற்றும் விதைக்காக வெங்காயம் வாங்கி செல்பவர்கள் அதனை நிறுத்திக் கொண்டனர்.
இதன் காரணமாக தற்போது தேனி மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தற்போது போடி நகர் மற்றும் கிராம பகுதிகளில் ஒரு கிலோ வெங்காயம் வெறும் இருபது ரூபாய் முதல் 25 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் அழுகிய மற்றும் முளைத்த வெங்காயங்கள் மூட்டை மூட்டையாக குப்பையில் கொட்டப்பட்டு வரும் அவலமும் அரங்கேறி உள்ளது.












Click it and Unblock the Notifications