ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து.. பகிரங்கமாக கை கோர்க்கின்றனவா திமுக, அமமுக கட்சிகள்?
திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம் என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
Recommended Video
தேனி: "திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சியை கலைப்போம்" என்று அமமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அமமுக ரகசிய உறவு உண்மையாகி விட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு கிளம்பி விட்டது.
நேற்று திருப்பரங்குன்றம் பேட்டியில் தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது,"காவி வேட்டியை கட்டிகொண்டு மோடி சாமியை வணங்க ஓபிஎஸ் குடும்பத்துடன் வாரணாசி சென்றார்.
இவரால் தமிழகத்தின் மானம் வடமாநில காற்றில் பறக்கிறது. திமுகவிற்கு வாக்களிப்பார்கள் என ஸ்டாலின் பேசுவது தவறானது. திமுகவின் பிரச்சாரம் என்பது எங்கள் மீதான அச்சத்தின் வெளிப்பாடு" என்றார்.

ஆட்சி மாற்றம்
ஆனால் ஓவர் நைட்டில் என்ன ஆனதோ தெரியவில்லை.. பிளேட்டை மாற்றி போட்டு தங்க தமிழ்செல்வன் ஒரு பேட்டியை தந்திருக்கிறார். தேனியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "22 தொகுதி தேர்தலில் வெற்றி பெற்று திமுகவுடன் இணைந்து ஆட்சியை கலைப்போம். மே மாதம் 23-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்" என்று கூறியுள்ளார்.

நிர்பந்தம்?
தங்க தமிழ்செல்வன் இப்படி பேச என்ன காரணம்? திமுக பக்கம் அமமுக சாய்கிறதா? அமமுக பக்கம் திமுக சாய்கிறதா? அப்படி ஒருவர் மீது ஒருவர் சாய வேண்டிய அவசியம், நிர்ப்பந்தம் இப்போது என்ன வந்தது? என்று தெரியவில்லை.

உண்மைதானா?
அதிமுக, அமமுகவுக்குள் 2 வருஷமாக நடந்து வருவது உட்கட்சி பூசல். அப்படி இருக்கும்போது இதில் எங்கே திமுக வந்தது? அமமுகவுக்கும், திமுகவுக்கும் ரகசிய உடன்பாடு உள்ளது என்றெல்லாம் அன்றைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு சொன்னதெல்லாம் உண்மைதானா? என்றும் புரியவில்லை.

பல கேள்விகள்
அதன்படி பார்த்தால், இவ்வளவு நாள் திமுகவும், அமமுகவும் ஒன்றாகதான் செயல்பட்டு வந்தார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இடைத்தேர்தல் முடிவு வந்தவுடன் ஆட்சியை கவிழ்க்க திமுக பக்கா பிளான் போட்டு வருகிறது. இந்த நிலையில்தான் தங்க தமிழ்ச்செல்வனின் பேச்சு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

குட்கா விவகாரம்
அமமுகவும் திமுகவுக்கு சாதகமாக வாக்களித்தால் எடப்பாடி அரசின் கதி என்னாகும்? திமுகவும், அமமுகவும் இணைந்துவிட வாய்ப்பு என்று தெரிந்தால், அதிமுக சும்மா இருக்காதே. குட்கா எம்எல்ஏக்கள் விவகாரத்தை கையில் எடுக்கவே செய்யும். ஆக மொத்தம் தங்க தமிழ்செல்வனின் இந்த ஒத்தை வார்த்தை ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் குழப்பி அடிக்கிறது. என்னமோ நடக்கிறது.. என்னன்னுதான் இன்னும் நமக்கு விளங்கல!












Click it and Unblock the Notifications