அரிகொம்பனின் அட்டகாசத்தால் அரண்டு போன வனத்துறை.. யானையை பிடிக்கும் வரை கம்பம் நகரில் 144 தடை உத்தரவு
தேனி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஏறத்தாழ 10 பேரை கொன்ற அரி கொம்பன் யானை தற்போது தேனியின் கம்பம் நகருக்குள் புகுந்த அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த யானையை பிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், யானையை பிடிக்கும் வரை கம்பம் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யானைகள் குழந்தை போல என்று யாராவது சொன்னால் அதை நம்ப வேண்டாம். அதுவும் ஒற்றையாக உள்ள காட்டு யானை நிச்சயம் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும். அப்படி ஒரு ஆபத்தான யானைதான் அரி கொம்பன் (அ) அரிசி கொம்பன். இது அரிசியை விரும்பி சாப்பிடுவதால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரிசிக்காக மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து அங்குள்ள கட்டிடங்களை சேதம் செய்து குறுக்கே வருபவர்களை கொன்றுவிட்டு அரிசியை சாப்பிட்டுவிட்டு செல்லும்.

இந்த அளவுக்கு அட்டகாசம் செய்த இந்த யானையை பிடிக்க 5 முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் அந்த யானையின் கழுத்தில் சாட்டிலைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்டது. இந்த யானை பிடிபட்டபோது பல்வேறு யோசனைகள் சொல்லப்பட்டன. அதில் முக்கியமானது, யானையின் உணவு பழக்கத்தை மாற்றுவது. யானைக்கு அபார நினைவு திறன் உண்டு. அது உணவுக்காக நாள் முழுவதும் பல கி.மீ தொலைவு வரை நடந்துக்கொண்டே இருக்கும்.
இப்படி சிறிய வயதில் தனது கூட்டத்துடன் சென்ற பாதை தான் இறக்கும் வரையில் நினைவில் வைத்திருக்கும். ஆனால் காலங்கள் மறும் நிலையில், மனிதர்களின் ஆக்கிரமிப்பு யானையின் வலைசை பாதையை மறைத்துவிடுகிறது. இதனால் குழப்பமடைந்த யானை அனைத்தையும் சேதப்படுத்திவிடுகிறது. அதேபோல உணவு எங்கு எளியதாக கிடைக்கிறதோ அந்த இடங்களையே யானை டார்கெட் செய்யும். இப்படி இருக்கையில் அரி கொம்பன் யானைக்கு அரிசி மிகவும் பிடித்த உணவாகிவிட்டது.
இந்த உணவு பழக்கத்தை மாற்ற குறைந்தபட்சம் 3 மாதங்கள் வரை அதற்கு ட்ரெய்னிங் கொடுக்க வேண்டும். இந்த ட்ரெய்னிங் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த போது கொடுத்திருந்தால் இந்நேரம் இது ஊருக்குள் அரிசி தேடி வந்திருக்காது. ஆனால் வனத்துறை இதனை செய்ய தவறிவிட்டது. எனவே தற்போது யானை பெரியாறு புலிகள் காப்பக பகுதியிலிருந்து வெளியேறி மேகமலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது.
பின்னர் அங்கிருந்து லோயர் கேம்ப், கழுதை மேட்டு பகுதி ஆகிய இடங்களை கடந்து தற்போது தேனியின் கம்பம் நகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. இதனையடுத்து மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம் என்று காவல்துறையும் வனத்துறையினரும் அறிவுறுத்தியிருந்தனர். ஆனாலும் யானையை வேடிக்கை பார்க்க மக்கள் வெளியே வந்துள்ளனர். இதனால் கம்பம் கூலத்தேவர் பகுதியில் புகுந்த யானை தெருவில் நின்றிருந்த பொதுமக்களை விரட்டியது.

இதனையடுத்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் முயற்சித்து வந்தனர். ஆனால் இந்த முயற்சி பலனளிக்காத நிலையில், அரி கொம்பன் யானையை பிடிக்க கும்கி யானை வரவழைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த யானையை பிடிக்கும் பணி பிற்பகல் 3 மணியளவில் தொடங்கும் என்றும், பிடிபட்ட அரி கொம்பனை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட பிரத்யேக வாகனமும் தயார் நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், யானையை பிடிக்கும் வரையில் கம்பம் நகர் பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என காவல்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து யானையை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications