டிடிவி தினகரன் எடுத்த ரிஸ்க்.. பழைய ஈயம், பித்தளைக்கு போன "குக்கர்".. தேனியில் திணறிய அமமுக.. வீடியோ
தேனி: தேனி தொகுதியில், பாஜக கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட அமமுக கடும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், மிகப்பெரிய அதிர்வலையை கட்சிக்குள் ஏற்படுத்தி வருகிறது.
நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.. இதில், அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் வெற்றி வாய்ப்பை மிக மோசமாக இழந்திருக்கின்றன.

இதில் தேனி தொகுதியை பொறுத்தவரை, அதிமுகவின் கோட்டையாகவே எப்போதும் கருதப்பட்டு வருகிறது.. இதில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன், கடந்த 1999ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு 3,03,881 ஓட்டுகளை பெற்றிருந்தார்.. அதாவது, அப்போது இவரை எதிர்த்து திமுகவில் போட்டியிட்ட செல்வேந்திரனை 45,806 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
அமமுக: பிறகு 2004ல் போட்டியிட்ட தினகரன், காங்கிரஸ் வேட்பாளர் ஆரூணிடம் 21,155 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்... இதுதான் தினகரன் பெற்ற முதல் தோல்வி..
இதற்கு பிறகு 2024ல் அரசியலில், தன்னுடைய அமமுகவிலிருந்து வெளியேறிய, தங்கதமிழ்செல்வனிடம் 2,72,825 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறார்.. தினகரன் இப்போது 2,92,668 ஓட்டுக்களை பெற்றிருக்கிறார். இதனால், அமமுக தரப்பில் கடும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.. இத்தனைக்கும், தேனியில் மொத்தம் 25 பேர் போட்டியிட்டாலும், தங்கதமிழ்செல்வனுக்கும், தினகரனுக்கும்தான் பலத்த போட்டி நிலவியது.
டிடிவி தினகரன்: பிரச்சாரத்தின்போதுகூட, தனக்கு யாரும் போட்டியே கிடையாது என்று தினகரன் சொல்ல, அவருக்கு பின்னே அமமுக சின்னமான குக்கரை அவரது ஆதரவாளர்கள் கையில் ஏந்தியபடியே வாக்கு சேகரித்தனர்.
அமமுகவின் இந்த படுமோசமான தோல்விக்கு சில காரணங்களையும் சொல்கிறார்கள்.. அதாவது, வாக்குப்பதிவு நேரத்தில், தாராளங்களை வழங்க வேண்டாம் என்று வேட்பாளரே சொல்லிவிட்டாராம்.. திமுக சார்பில் தடைஏற்படும் என்ற எச்சரிக்கை நடவடிக்கையால், கடைசி நேர கவனிப்பும் நிறுத்தப்பட்டுவிட்டதாம்.. இதெல்லாம் சேர்ந்துதான் அமமுகவை மண்ணை கவ்வ வைத்துவிட்டதாக புலம்புகிறார்கள்.
கிண்டல், கேலி: இதற்கு நடுவில், பாஜகவுடன் கூட்டணி வைத்த அமமுகவை கிண்டல் செய்து நிறைய மீம்ஸ்களும், வீடியோக்களும் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதேபோல, அமமுகவினரை கேலி செய்யும் வகையில், தேனி முழுவதும் வாட்ஸ்அப் வீடியோ ஒன்று வைரலாகி கொண்டிருக்கிறது.
அந்த வீடியோவில், வியாபாரி ஒருவர் சைக்கிளில், பழைய ஈயம், பித்தளைக்கு பேரீச்சம்பழம் என்று சொல்லிக்கொண்டே, "காலை முதல் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் குக்கர்களை பணம் வாங்காமலே இலவசமாக கொடுத்துட்டு போறாங்கப்பா" என்கிறார். அப்போது 2 பேர் வந்து தங்களது குக்கர்களை அவரிடம் கொடுத்து விட்டு, பணம் எதுவும் வாங்கிக் கொள்ளாமலேயே செல்கிறார்கள்..
சித்தரிப்பு: அதாவது, தேனி தொகுதியை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்பதையே மறைமுகமாக உணர்த்துவதாக இந்த வீடியோவை சித்தரிக்கப்பட்டுள்ளது.. இது அமமுகவினருக்கு கடும் அதிர்ச்சியையும் தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications