12 கி.மீ குமுளியில் இருந்து.. தேனி காட்டுக்குள் கண்ணகி கோயில் சித்திரை திருவிழா இன்று! இதுவே ரூல்ஸ்
தேனி: வருடந்தோறும் சித்திரை மாதம் முழு நிலவு அன்று கண்ணகி கோவில் திருவிழா நடைபெறும். தமிழக - கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோவிலில் சித்திரை முழு நிலவு திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு திருவிழாவும் கோலாகலமாக இன்று நடைபெற உள்ளது.இதற்காக ஏராளமான பக்தர்கள் இரு மாநிலங்களிலிருந்தும் குவிந்து வருகின்றனர்.
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் இந்த ஆண்டு சித்திரை முழு நிலவு விழா வரும் மே மாதம் 12ம் தேதி நடைபெறுகிறது. அந்தவகையில், தேனி மாவட்டம் கூடலூர் அருகே விண்ணேற்றிப்பாறை மலையிலுள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலவு திருவிழா இன்று மே 12ம் தேதி, நடக்கிறது.

இவ்விழாவை முன்னிட்டு இன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார் ஏற்கனவே வீரபாண்டி கோயில் திருவிழாவை முன்னிட்டும் கடந்த 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதுபோல இன்றைய தினமும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த 2 விடுமுறைகளை ஈடுசெய்யும் வகையில் வரும் மே 17 மற்றும் 31 ஆகிய இரு தேதிகளில் முழு வேலை நாட்களாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுக்குள் கண்ணகி கோயில்
இந்த கண்ணகி கோயில் காட்டுக்குள் அமைந்துள்ளதால் ஒவ்வொரு சித்திரை மாத முழு நிலவன்று ஒருநாள் மட்டுமே திருவிழா நடைபெறுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
கண்ணகி கோயிலுக்கு, தமிழகத்தின் பளியன்குடி வழியாக மலைப்பாதையில் 6 கி.மீ தொலைவு நடந்துதான் செல்ல வேண்டும்.. கேரள வழியாக வந்தால், குமுளியிலிருந்து ஜீப் மூலம் 12 கிமீ செல்ல வேண்டும். எனவே இந்த இரு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கண்ணகி கோயிலுக்கு திரண்டு வருவார்கள்.. இதன்காரணமாக, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களின் அதிகாரிகளும் இணைந்துதான, இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு வருடமும் மேற்கொள்வார்கள்.
இரு மாநில அதிகாரிகளும் பங்கேற்பு
இந்த வருட விழாவை முன்னிட்டும், கடந்த மாதம் 5ம் தேதியே முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம், கேரள மாநிலம் தேக்கடியில் உள்ள ராஜிவ் காந்தி அரங்கில் நடைபெற்றது.
இதில், தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், இடுக்கி மாவட்ட ஆட்சியர் விக்னேஷ்வரி இருவரும் கலந்து கொண்டனர். அத்துடன் 2 மாவட்டங்களின் காவல்துறை கண்காணிப்பாளர்கள், வனம், போக்குவரத்து துறைகளின் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
அடர்ந்த காட்டுக்குள் இந்த கண்ணகி கோயில் உள்ளதால், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, வளம் பாதிக்காதவாறு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதித்தல், பக்தர்களுக்கு தண்ணீர், சாலை வசதி கழிப்பிட வசதிகள் மற்றும் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு அவசர சிகிச்சை உதவி அளித்தல் ஆகிய முன்னேற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. உணவு, பாதுகாப்பு, பஸ் வசதிகள் செய்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சித்திரை முழு நிலவு
கண்ணகி அறக்கட்டளையின் சார்பாக பக்தர்களுக்கு உணவு, வனப்பகுதியில் செல்வதற்காக ஜீப்கள், பக்தர்களுக்கான அனுமதி அட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்றவை குறித்து இரு மாநில அதிகாரிகளும் வலியுறுத்தினார்கள்..
இறுதியில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங்கும், இடுக்கி மாவட்ட கலெக்டர் விக்னேஷ்வரியும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்.. அப்போது, "சித்திரை முழு நிலவு விழாவில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், பக்தர்கள் வனப்பகுதிக்குள் வரும் போது எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கொண்டு வருவதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவும் ஆலோசிக்கப்பட்டது.
வனவிலங்குகள் எச்சரிக்கை
அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் செல்லும் போது வனவிலங்குகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விலங்குகளுக்கு தொந்தரவு தராத வகையில் பயணிக்க அறிவுறுத்தல்கள் வழங்குவது குறித்தும் ஆலோசனை செய்தோம்" என்றனர்.
இந்நிலையில், இன்றைய தினம் திருவிழா நடைபெற உள்ளது.. காலை 6 முதல் பிற்பகல் 2.30மணி வரை தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.. கோயில் வளாகத்தில் இருந்து பக்தர்கள் மாலை 5 மணிக்கு வெளியேற வேண்டும் என்பதும் நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications